தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டில் இருப்பது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அபிராமபுரத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளை தடுப்பது தொடர்பாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மாநகராட்சியில் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
தமிழகத்தில் வேலூர், மதுரை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 சதவீதம் வெயில் பதவிவாகிறது என்றும் தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கோடை காலத்தில் போதுமான அளவு பொதுமக்கள் நீர் குடிக்க வேண்டும் என்று அறிவித்தனர்.
பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
மேலும் பேசிய அமைச்சர், வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும் என்றும் பழவகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடலின் நீர் சக்தியை தக்க வைக்கும் எனவும் ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை, இளநீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம் எனவும் சக்கரை பானங்களை தவிர்ப்பது நல்லது எனவும் அறிவுரை வழங்கினார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உடுத்தும் ஆடைகள் முழு உடலையும் மறைக்கும் ஆடையாக இருப்பது மிகவும் நல்லது எனவும் ஆணையர் ககன் தீப் சிங், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போல ஆடை அணிய வேண்டும் என எடுத்துக்காட்டினார்.
மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தலையில் தொப்பி, துண்டு அணிந்து செல்ல வேண்டும் என்றும் செருப்பு அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டில் இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தினார்
வெயில் காலத்தில் ஆல்கஹால் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மது அருந்துவோர் குறைத்து கொள்ள வேண்டும் என குடிமகன்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
அதேபோல் வீட்டின் வெளியே வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகன பெட்ரோல் டேங்க் மற்றும் காரின் பேனட்டின் மீது குழந்தைகளை உட்கார வைக்க வேண்டாம் என்று கூறினார்.
வெப்பத்தை எதிர்கொள்வதற்கு சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது, மருத்துவ படுக்கைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தர விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் டெல்லி, ஹரியானா உத்திரப்பிரதேசம், மராட்டியம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், சென்னை ஐ.ஐ.டியில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் அங்கு தற்போது தொற்று குறைந்துள்ளதற்கு காரணம் மாணவர்கள் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிந்ததால் தான் எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிவது தான் தொற்றை குறைப்பதற்கான வழி என தெரிவித்தார்.
XE வகை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் இதனால் பெரிய அளவில் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் அந்த வகை தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைவாகத்தான் உள்ளது என்றும் தமிழகத்தில் தற்போது வரை XE வகை தொற்று கண்டறியப்பட வில்லை எனவும் கூறினார்.
தமிழகத்தில் 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் எனவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும் என தெரிவித்தார். பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களை கணக்கெடுத்து முகக்கவசம் வழங்குவது குறித்து பள்ளி கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று மதியம் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அவசர ஆலோசனை நடைபெற உள்ளது என்றும் மருத்துவக் கழிவுகள் கையாள்வது, சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற விவகாரம், மருத்துவக்கட்டமைப்புகள் மேம்படுத்தல் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heat Wave, Ma subramanian, Summer Heat