• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன? யார் யாருக்கு என்னென்ன அதிகாரம்?

நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன? யார் யாருக்கு என்னென்ன அதிகாரம்?

புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரி சட்டமன்றம்

நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன? யார் யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பல மாநிலங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளன. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டுவந்தார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்துவருகிறார். கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக பதவி விலகினார். அதே கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அப்போதைய முதல்வர் குமாரசுவாமி தோல்வியடைந்தார். அதேபோல, நாடாளுமன்ற வரலாறும் பல நம்பிக்கை வாக்கெடுப்புகளை சந்தித்த ஒன்று. இன்று புதுச்சேரி மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன? அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்வது முக்கியமாகிறது.

    நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?

    ஆளும் அரசு அல்லது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்ற சந்தேகம் வரும்போது, தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கு முதல்வர் அல்லது பிரதமர் நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்புதான் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகும்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த யார் உத்தரவிட முடியும்?

    மத்திய அரசைப் பொறுத்தவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் அரசின் மீது பெரும்பான்மை குறித்து சந்தேகம் வரும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிடுவார்.

    எம்.பி, எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியுமா?

    நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சி சார்பிலோ ஆளும் அரசின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர முடியும். ஆனால், அவர்கள் தன்னிச்சையாக கொண்டு வர முடியாது. அவர்கள், மக்களவை அல்லது சட்டப்பேரவை சபாநாயகரிடம் விண்ணப்பிக்க மட்டுமே முடியும். அதனை, நிராகரிக்கவும், ஏற்கவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் யார் பங்கேற்கலாம். விதிமுறைகள் என்ன?

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். புதுச்சேரி போன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களில், நியமன உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கொறாடாவின் உத்தரவுப்படி வாக்களிக்கவேண்டும். சுயேட்சைக்கள், அவர்கள் விரும்பும் தரப்புக்கு வாக்களிக்கலாம். சபாநாயகருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை எப்படி கணக்கிடப்படும்?

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாடாளுமன்ற அவை அல்லது சட்டமன்ற அவையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையை பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எனவே, ஆதரவும் அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் புறக்கணிப்பது ஒருவகை உத்தியாகவே உள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: