தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு இத்தனை கோடியா?

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு இத்தனை கோடியா?

மாதிரி படம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இதுவரை 217 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக உடனடியாக களமிறங்கிய பறக்கும் படை அதிகாரிகள், ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சேலத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச்சென்ற தனியார் மினி வேன் ஒன்றை மடக்கினர். அதில், உரிய ஆவணங்களின்றி ஐந்து கோடியே 91 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்த நிலையில், தனியார் நகைக்கடை ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, நகைகளை கொண்டுவந்த மோகன், சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எம். புதுப்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

  இதனிடையே, சிவகங்கை அருகே சிலந்தகுடியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது காளையார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அருண் ஸ்டீபன் உள்ளிட்ட 9 பேர் வாக்காளர்களின் பெயர்கள் எழுதப்பட்ட நோட்டுகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்த பணம் மற்றும் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதிமுக பிரமுகர் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

   

  இவ்வாறு தமிழகத்தில் இதுவரை சுமார் 81 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Vijay R
  First published: