தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய காரணம் என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதே முடிவை மேலும் பல மாநிலங்களும் ஏற்கெனவே எடுத்துள்ள நிலையில் அதற்கான காரணம் என்ன என்று தற்போது பார்க்கலாம்.

 • Share this:
  நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரு தவணை தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளின் மூலமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

  தற்போது பாரத் பயோடெக்கின் கோவேக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்ட், ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி என 3 தடுப்பூசிகளுக்கே இந்தியாவில் அனுமதி தரப்பட்டுள்ளது. இனி இந்த நிறுவனங்களின் மொத்த உற்பத்தியில் 50 விழுக்காட்டை மட்டுமே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்போம் என மத்திய அரசு கூறிவிட்டது. மீதமுள்ள 50 விழுக்காட்டை மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து தடுப்பூசிகளின் விலையும் உயர்த்தப்பட்டது. சுருங்கக் கூறினால், 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசியை தங்களால் வழங்க முடியாது என மத்திய அரசு புதிய நடைமுறை மூலம் தெளிவுபடுத்தியது. அதன் காரணமாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களது செலவில் இலசமாக தடுப்பூசி போடுவோம் என அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.

  ஆனாலும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசு அறிவித்தபடி மே 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் தொடங்கப்படவில்லை. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கே இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்காமல் பல மாநிலங்கள் தவித்து வருகின்றன. சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களால் மாநிலங்களின் தடுப்பூசித் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

  தமிழகத்தில் சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் 18 வயதுக்கு மேற்பட்டோராக உள்ள நிலையில், 13 லட்சம் தடுப்பூசிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனால், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்து 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தெலங்கானா, டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஒடிஷா மாநிலங்களும் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய உள்ளன

  இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய பைசர், மோடர்னா தடுப்பூசிகளும் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: