ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 3 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக தமிழக நிதித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அது குறித்து விசாரணை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என கேட்டு வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கேள்விக்கு தமிழக நிதித்துறை பதிலளித்துள்ளது. அதன்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 3 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும் ஆணையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி, அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 4 கோடியே 23 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.