Home /News /tamil-nadu /

நீட் என்றால் என்ன? தமிழ்நாடு எதிர்க்க காரணம் என்ன?

நீட் என்றால் என்ன? தமிழ்நாடு எதிர்க்க காரணம் என்ன?

நீட் தேர்வு

நீட் தேர்வு

பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test - என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன.

    நீட் தேர்வு என்றால் என்ன?

    தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test - என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2013 மே 5ம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு நடுவண் இடைக்கல்வி வாரியம் நடத்தியது. கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    நீட் தேர்வு முறை

    இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
    ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும்.

    இதையும் படிங்க : நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு... தமிழக அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர்

    நீட் தேர்வும் - தமிழ்நாடும்

    நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிமுக அரசு நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தார். 2016 செப்டம்பர் 22-ம்தேதிக்கு பின்னர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நீட் தேர்வு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. பின்னர் தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-ல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கை வலுப்பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முக்கிய கோரிக்கையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது அமைந்தது.

    நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பது ஏன்?

    நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றின் தொகுப்பாக பின்வருவனவற்றை கூறலாம்...

    கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி உடையவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியை பெற்று மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்படுவதில்லை. நீட் தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்ளுக்கு எதிராவும், பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானது.

    இதையும் படிங்க : தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கம்

    தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் எழுதலாம் என்றபோதிலும், மாணவர்களின் பொருளாதார நிலைமை அதற்கு இடம் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்துவதால், அவர்களின் கல்வித் தரம் குறையும். கல்வி வணிகமாக்கலை நீட் தேர்வு முறை ஊக்குவிக்கிறது. நீட் தேர்வு மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு பாரபட்சமானது என்று 2020 இல் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்புக்கு தயாரான மாணவர்கள், நீட் பாடத்திட்டத்திற்கென தனியே தயாராக வேண்டியுள்ளது. 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசின் நடவடிக்கைகள் 

    திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நீட் தேர்வின் தாக்கங்களை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநில அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, ''தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் நீட் தாக்கம்'' என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்தது.

    இதன் தொடர்ச்சியாக, சட்டசபை கூட்டத் தொடரில், தமிழக சட்டமன்றத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம்தேதி நிறைவேற்றப்பட்டது. அத்துடன், மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க அறிக்கை கடந்த செப்டம்பர் 20 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

    சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக கவர்னரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மசோதாவை மறு பரிசீலனை செய்யக்கோரி கவர்னர் கடந்த 1-ம்தேதி சட்டப்பேரவை செயலருக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு பிப்ரவரி 5-ம்தேதி சனிக்கிழமையன்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி