Home /News /tamil-nadu /

ஒமைக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை முறைகள் என்னென்ன?

ஒமைக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை முறைகள் என்னென்ன?

ஒமைக்ரான் வைரஸை

ஒமைக்ரான் வைரஸை

கொரோனா தொற்று உறுதியானால், அந்த நபருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டியது அவசியம்.

ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதும் அவருக்கு என்ன வகையான கொரோனா என்று கண்டறிய வேண்டியது அவசியம், அதன்படி ஒமைக்ரான் வைரஸை கண்டறியும் பரிசோதனை முறைகள் குறித்து காண்போம்.

ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை: கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து சொல்வதற்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் வாயிலிருந்து எடுக்கப்படும் மாதிதிகள் இதில் பரிசோதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொரோனாவை உறுதி செய்ய இந்த பரிசோதனை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். Rapid பரிசோதனைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

மூன்று முதல் ஆறு மணி நேரங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் கிடைக்கும். சாதாரணமாக செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் உருமாறிய கொரோனாவா இல்லையா என தெரியாது.

மரபணு பகுப்பாய்வு :

ஒருவருக்கு கொரோனா உறுதியானதும் அவருக்கு என்ன வகையான கொரோனா என்று கண்டறிய வேண்டிய அவசியம் இருந்தால் எடுக்கப்பட்ட மாதிரி மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பரிசோதித்து பார்க்கப்படும். இந்தியாவில் 37 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மாநில பொது சுகாதார ஆய்வகம் இதற்கான அதிநவீன வசதிகள் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் புனேவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு சென்று பிரத்யேக பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர்.

இந்த பகுப்பாய்வு கூடத்தில் ஒருவருக்கு வந்திருப்பது என்ன வகையான கொரோனா என துல்லியமாக கண்டறிய முடியும். ஆனால் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள நான்கு நாட்கள் ஆகும்.

டேக் பாத் பரிசோதனை:

உருமாறிய கொரோனாவை துல்லியமாக கண்டறியும் பரிசோதனை என்றாலும் பெருந்தொற்று காலத்தில் நான்கு நாட்கள் காத்திருந்தால் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே Taqpath என்ற கிட் பயன்படுத்தி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து உருமாறிய கொரோனா இருக்க வாய்ப்புள்ளதா இல்லையா என சில மணி நேரங்களிலேயே தெரிந்து கொள்ளலாம்.

சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் போது எப்படி மாதிரி எடுக்கப்படுகிறதோ அதே போல் தான் மாதிரி எடுக்கப்படும் நோயாளிக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வகத்துக்கு வரும் போது சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யாமல் Taqpath கிட் கொண்டு பரிசோதனை செய்யப்படும்.

இந்த கிட் பயன்படுத்தும் போது, கொரோனா வைரஸ் ல் உள்ள N , E மற்றும் S ஆகிய மூன்று ஜீன்கள் இருக்கிறதா என கண்டறியும். புதிய ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ்-ல் S ஜீன் காணப்படாது. எனவே பரிசோதிக்கப்படும் மாதிரியில் S ஜீன் தென்படவில்லை என்றால் அது ஒமைக்ரானாக இருக்கலாம் என முதல் கட்டமாக தெரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி முடிவை உறுது செய்துக் கொள்ளலாம்.

சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் N மற்றும் E ஜீன் மட்டுமே கண்டறிய முடியும்.S ஜீன் உள்ளதா என கண்டறிய முடியாது. இந்த டேக் பாத் கிட் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நான்கு நகரங்களிலும் மேலும் உள்நாட்டு விமான நிலையங்கள் கொண்ட சேலம், தூக்குக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 அரசு ஆய்வகங்களில் வசதி அறிமுகம்.

யாருக்கெல்லாம் டேக்பாத்

இரண்டாவது முறை தொற்று ஏற்படுவது, தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்று ஏற்படுவது, சமூகத்தில் ஒரு இடத்தில் தொற்று குவியல் ஏற்படுவது, குடும்பத்தில் தொற்று குவியல் ஏற்படுவது, கொரோனா பாசிடிவ் ஆன குழந்தைகள், தீவிர நுரையீரல் தொற்றுடன் வரும் இளைஞர்கள், இணை நோய்கள் இல்லாமல் தீவிர கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு இந்த Taqpath கிட் பயன்படுத்தப்படும்.

1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய 1.3 லட்சம் செலவாகும். இந்த கிட்டுகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Must Read : ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Taqpath கிட் பயன்படுத்தப்படும் 12 ஆய்வகங்கள்:

சென்னையில்,

1. மாநில பொது சுகாதார ஆய்வகம்

2. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்

3.சென்னை மருத்துவக் கல்லூரி

4.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

5.ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

கோவையில்,

6.கோவை மருத்துவக் கல்லூரி

7.ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி

8.திருச்சி மருத்துவக் கல்லூரி

9.சேலம் மருத்துவக் கல்லூரி

10.மதுரை மருத்துவக் கல்லூரி

11.தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி

12.கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி
Published by:Suresh V
First published:

Tags: Corona positive, Omicron

அடுத்த செய்தி