ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?

சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?

தமிழக சட்டப்பேரவையின் 16வது சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வாக உள்ளார். சபாநாயகருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சட்டசபை கூட்டத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பவர் சபாநாயகர்தான். தமிழக சட்டப்பேரவையின் முதல் சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை. அவரைத் தொடர்ந்து சி.பா.ஆதித்தனார், பி.ஹெச்.பாண்டியன், தமிழ்க்குடிமகன், பிடிஆர் பழனிவேல் ராஜன் உள்ளிட்டோரும் சபாநாயகர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். சபாநாயகர், கட்சி சார்பற்றவராக நடந்துகொள்ள வேண்டும் என்பது விதி.

  அதனால், குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், தனது பதவிக்காலம் முடியும் வரை அவர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு, நேர அளவை முடிவு செய்யக்கூடியவர் அவர்தான். அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவை குறிப்பில் பதிவிடுவதற்கும் அதை நீக்குவதற்கும் அதிகாரம் படைத்தவர் சபாநாயகர்.

  சட்டமன்றத்தில் விதிகளை மீறி நடக்கும் உறுப்பினர்களைத் தற்காலிகமாகவோ, கூட்டத்தொடர் முழுவதுமோ கலந்துகொள்ள தடை விதிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. சட்டமன்றத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த உறுப்பினராவது நடந்து கொண்டால், அதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு உரிமை உண்டு,

  ஒருவேளை உறுப்பினரின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது. 1985 முதல் 1989ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையின் தலைவராக இருந்த பி.ஹெச்.பாண்டியன், சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்பதைப் பரவலாக அறியச் செய்தவர். அரசியல் சாசன நகலை எரித்ததாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை கூண்டோடு தகுதி நீக்கம் செய்தார் பி.ஹெச். பாண்டியன். மேலும், சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்தார்.

  முந்தைய ஆட்சியில், முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் புகார் அளித்த டிடிவி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார் அப்போதைய சபாநாயகரான தனபால். சபாநாயகரின் முடிவுக்கு எதிராக 18 பேரும் நீதிமன்றத்தை நாடியபோதும் சபாநாயகரின் தகுதி நீக்கம் உத்தரவு செல்லும் என்றே தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: TN Assembly