கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் உட்பட அவர் தொடர்பான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையானது நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்படுவதை அறிந்த ஏராளமான தொண்டர்கள் காலை முதலே முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இல்லத்தின் முன்பாக கூடி
திமுகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதே போன்று எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனதினர், ஒப்பந்ததாரர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் உட்பட பல்வேறு நபர்களை இல்லங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்ததால், அவர்களுக்கு காலை உணவு, ஸ்நாக்ஸ், குளிர்பானம், மதிய உணவு, டீ போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வந்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், கருப்பண்ணன், தங்கமணி, செங்கோட்டையன், உதயகுமார் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வந்து சோதனை முடியும் வரை வீட்டின் அருகிலேயே காத்திருந்தனர்.
நேற்று காலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை, மாலையில் ஒவ்வொன்றாக நிறைவடைய துவங்கியது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் இரவு 8 மணியளவில் சோதனையானது நிறைவடைந்தது. சுமார் 13.30 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த சோதனையின் முடிவில் வீட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் செல்போன் ஆகியவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைபற்றப்பட்டன. பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொண்டர்களை சந்தித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர்களை எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து பேசினார்.
Read More : ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா கடமை தவறிவிட்டது- நாடாளுமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டு
இதனிடையே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை குறித்து பேட்டியளித்த அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை, எஸ்.பி.வேலுமணி வீட்டில் எந்த ஆவணங்களோ, பணமோ, நகைகளோ கைபற்றபடவில்லை என தெரிவித்தார். ஆனால் திமுகவின் ஐ.டி.விங் சார்பில் பல்வேறு ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டதாக போலியாக அதிகாரிகள் கையெப்பமிடாத செய்தி குறிப்பு ஒன்றை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டினார். எஸ்.பி.வேலுமணிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தியிருக்கிறார்கள் எனவும், ஏற்கனவே நடந்த சோதனையில் ஏதும் கைப்பற்ற படவில்லை எனவும் தெரிவித்தார்.
Must Read : உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்குக்கு கூட மிஞ்சாது.! - விலை போகாத சின்ன வெங்காயத்தால் விவசாயிகள் வேதனை
எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில், 5 ஆதார் கார்டுகள், 2 வாக்காளர் அடையாள அட்டை , ஒரு பேன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஒன்று, அவரது பழைய Nokia கைப்பேசி ஆகியவை மட்டுமே கைபற்றப்பட்டுள்ளன எனவும், அவர் மீது பதியப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். நேர்மையாக விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைத்தோம் எனவும், ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வீட்டிக்குள் வந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள் எனவும் இதற்கு வாட்ச்மேன் கேட்டைத் திறக்க வில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை எனவும் வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார்.
காலை 6.30 மணிக்கு துவங்கிய பரபரப்பு இரவு 9 மணி வரை நீடித்தது. சோதனையை முன்னிட்டு ஏராளமான போலீசார் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.