பிரதமர்
மோடி ஒரு நாள் பயணமாக இன்று மாலை
சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தொடங்கி வைத்த என்னென்ன திட்டங்கள் என்பதை பார்க்கலாம்.
2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில், 5 திட்டங்களை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
முதலாவதாக, 500 கோடி ரூபாய் திட்டச்செலவில் 75 கிலோமீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதையும்,
115 கிலோ மீட்டரில் எண்ணூர் - செங்கல்பட்டு பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும்,
அத்துடன், 910 கோடி ரூபாய் மதிப்பில் திருவள்ளூர் - பெங்களூரு பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது.
முக்கியமாக, பிரதமர் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் சென்னையில் கட்டப்பட்டிருக்கும் ஆயிரத்து 152 வீடுகளும் திறக்கப்படுகின்றன.
இதுபோக, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
முதலாவதாக, 262 கிலோ மீட்டர் தூரத்தில் பெங்களூரு - சென்னை இடையே விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தை இணைக்கும் இந்த திட்டத்தின் மூலம் சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் மூன்று மணி நேரம் குறையும்.
அடுத்ததாக, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட நான்கு வழி உயர்மட்ட சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 5 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த சாலை வருகிறது.
நெரலூரு - தர்மபுரி இடையே நான்கு வழி நெடுஞ்சாலை, மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதிகளில் 2 வழி நெடுஞ்சாலையும் பட்டியலில் உள்ளது.
சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் நோக்கத்தில், சென்னையில் 1400 கோடி ரூபாயில் "மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
முக்கியமாக, சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை சீர்ப்படுத்தும் பணியும் தொடங்குகிறது. இதற்காக ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.