ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருந்துவருகின்றனர். அதில், வேலூர் மத்திய சிறையில் – முருகன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோரும் புழல் மத்திய சிறையில், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் உள்ளனர். ரவிச்சந்திரன், மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
எழுவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் அனுப்பியுள்ள நிலையில் ஆளுநர் முன்னிருக்கும் வாய்ப்புகள் என்ன என்பது குறித்து அறிந்துகொள்வது அவசியமாகிறது.
ஒன்று. இந்திய அரசியல் சாசனம் 161 பிரிவின்படி எழுவரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அறிவுரையாக அனுப்பியிருந்தது. இந்த பிரிவின் கீழ் அனுப்பப்படும் தீர்மானத்தை பெரும்பாலும் ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது பிறந்தநாட்களை முன்னிட்டு பல்வேறு குற்றங்களில் கைதாகி, சிறை தண்டனை அனுபவித்துவந்த 3,500 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது. ஆளுநர் நினைத்தால் இழுத்தடிக்க முடியும். அவர், எழுவர் விடுதலை தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டு, தீர்மானத்தை திருப்பி அனுப்பலாம், ஆனால், நிராகரிக்க முடியாது.
மூன்றாவதாக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க எந்த காலக்கெடுவும் இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் சொல்லியிருந்தாலும், அதற்குள் முடிவெடுத்தாகவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
மேலும் பேரறிவாளன் தொடுத்துள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்போது ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது.
நேற்று, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் தலைமை செயலாளர் சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்றும் நல்ல முடிவை எடுத்து 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தியதாக கூறினார்.
திமுகவைப் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல நாங்கள் என்றார். ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி அதன் அடிப்படையில் தலைவர்களின் பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகளை ஆளுநர் ஒப்புதல் பெற்றே விடுவித்தோம் என தெரிவித்தார்.
ஒரு தாயின் உணர்வாக அற்புதம்மாள் வேதனையை புரிந்துகொள்கிறோம், அதனடிப்படையில் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியதாகவும், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.