Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை மையம்

வானிலை

வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் சராசரி வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரசேதச மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தணியும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளார்.

    தாங்கள் கணித்தது போலவே ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் வெப்ப அலை இரு தினங்களுக்கு முன்னர் முடிந்து விட்டதாகவும் அவர் கூறினார். டெல்லியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வடமேற்கு பகுதிகளுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மே - 7 ஆம் தேதி வரை அனல் காற்று வீச வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கடுகாம்பாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5,000 வாழைத்தார்கள் வேரோடு சாய்ந்தன.

    மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 12 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Global warming, Sun, Tamil Nadu, Weather News in Tamil

    அடுத்த செய்தி