Home /News /tamil-nadu /

தமிழ் பண்பாட்டை சுமப்போம்.. மே.22ல் தருமபுரத்தில் சந்திப்போம்.. அண்ணாமலை!

தமிழ் பண்பாட்டை சுமப்போம்.. மே.22ல் தருமபுரத்தில் சந்திப்போம்.. அண்ணாமலை!

அண்ணாமலை

அண்ணாமலை

Pattina Pravesam | ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என அண்ணாமலை கூறியிருந்தார்.

    ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில், மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில், மே.22ம் தேதி தருமபுரத்தில் சந்திப்போம் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கடந்த ஆண்டு திருவாடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் இம்மாத இறுதியில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

    பட்டின பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரரை கொடுத்தாவது தருமபுரம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். முதலமைச்சர் இதில் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். ஆதீனத்துடன் பேசி இரு சுமூகமான முடிவை அரசு எடுக்கும் என்று விளக்கமளித்தார்.

    இதுதொடர்பாக தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்துள்ளது தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்ந நிகழ்ச்சியை நடத்தி காட்ட தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில்,ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில், மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில், மே.22ம் தேதி தருமபுரத்தில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார்.

    'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!'

    தமிழ் பண்பாட்டை சுமப்போம். May 22 தருமபுரத்தில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, Dharmapuram Aadheenam

    அடுத்த செய்தி