சசிகலா பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் முழு மனதோடு வரவேற்போம் என்றும் அவர் கட்சியில் சேர்ந்தால் கட்சி மேலும் வலுப்பெறும் என்றும்
பாஜகவை சேர்ந்தவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் சட்டமன்ற குழு தலைவராகவும் நயினார் நாகேந்திரன் இருந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணைத்தலைவர் பதவி திரும்ப பெறப்பட்டது. தொடர்ந்து அவர் சட்டமன்ற குழு தலைவராக நீடிக்கிறார்.
இந்த நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரான அவர் நெல்லையில் நடைபெற்ற திருமண விழாக்களில் பங்கேற்றார். அப்போது நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், சசிகலா பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் முழு மனதோடு வரவேற்போம். அவர் வருகையால் பாரதிய ஜனதா கட்சி வலுப்பெறும். அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும். எனினும் அவர் அதிமுகவில் இணைந்தாலும் அக்கட்சியும் பலம் பெறும் என தெரிவித்தார்.
அவருக்கென தொண்டர் பலம் இருப்பதால் எங்கு சேர்ந்தாலும் அக்கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சி அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பழுத்த பழம் இருக்கும் மரம் தான் கல் எறி படும். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தற்போது அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் காரணமாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல்வேறு கட்சியினர் பாஜக மீது விமர்சனத்தை முன் வைக்கின்றனர் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பு..எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பொன்னையன்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் வளரவே முடியாது எனவும் இரு மொழி கொள்கையை ஆதரித்தால் மட்டுமே வளர முடியும் என்றும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து நாம் கேள்வி எழுப்பிய போது, “ அவருடைய விமர்சனம் குறித்து நான் பதில் ஏதும் அளிக்க விரும்பவில்லை. எனினும் தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. இருமொழிக் கொள்கை முடிவு தான் தமிழகத்திற்கு சரியாக இருக்கும் என்று பதிலளித்தார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 25 தொகுதிகளுக்கு மேல் தமிழகத்தில் இருந்து வெற்றி பெறுவோம். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி பலமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
.பாரதிய ஜனதா கட்சியில் சசிகலாவை சேர்த்துக் கொள்வோம் என நயினார் நாகேந்திரன் பேசியதை அடுத்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் கட்சியினுடைய கருத்துக்கள் இல்லை என கூறிய நிலையில் இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார் அதிமுகவிலேயே சசிகலாவை சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லாத நிலையில் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியில் சசிகலாவை சேர்த்துக் கொள்வோம் எனக் கூறியதால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.