இங்கே, நம்மை அண்டிஒண்டி பிழைக்க வந்தவர்கள், நம்மீது அதிகாரத்தைச் செலுத்தி ஆண்டு கொழுத்தவர்கள், உலகப் புகழ்பெற்ற
சென்னை கடற்கரையில் 2 ஏக்கர் 3 ஏக்கர் நிலத்தில் பலகோடி செலவில் சமாதி கட்டி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சிறிய கூரைக்குக்கீழே நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் நினைவிடம் இருப்பதென்பது ஒவ்வொரு தமிழ் மகனும் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு இழிநிலை. இதை மாற்றுவதற்கேனும் மானத்தமிழ் பிள்ளைகள் நாம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற உறுதியை ஏற்கிறோம் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது, தெற்கே இலங்கை, வடக்கே கங்கை, குடதிசை மகோதை, குணதிசை கடாரம் இவற்றையெல்லாம் வென்று தன் பெருமிதத்தை நிலைநாட்டிய அரசனுக்கு அரசன் நம் அருமைப் பெரும்பாட்டன் அரசேந்திரச்சோழன் அவர்களினுடைய பிறந்தநாள் விழாவை பெருமிதத்தோடும் திமிரோடும் நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பிரம்மதேயம் என்கிற வரலாற்றுப் புகழ்பெற்ற இன்னும் பெரும்பேரு பெறப்போகிற இந்த கிராமத்தில், நம்முடைய பாட்டனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. தமிழினம் எவ்வளவு தூரம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு நம்முடைய பாட்டனார் அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தை பார்க்கும்போதும், அவருடைய தந்தை ராஜராஜன் என்கிற அருண்மொழிச்சோழன் அடக்கம் செய்யப்பட்ட உடையாளூரை சென்று பார்க்கும்போதும் உணர முடியும். அதை பார்க்கும்போது அறம், மானம், வீரம் இவை மூன்றும் உயிரென்று வாழ்கிற ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கண்ணில் நீர் வடியாது, இரத்தம் வடியும்.
இங்கே, நம்மை அண்டிஒண்டி பிழைக்க வந்தவர்கள், நம்மீது அதிகாரத்தைச் செலுத்தி ஆண்டு கொழுத்தவர்கள், உலகப் புகழ்பெற்ற சென்னை கடற்கரையில் 2 ஏக்கர் 3 ஏக்கர் நிலத்தில் பலகோடி செலவில் சமாதி கட்டி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சிறிய கூரைக்குக்கீழே நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் நினைவிடம் இருப்பதென்பது ஒவ்வொரு தமிழ் மகனும் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு இழிநிலை. இதை மாற்றுவதற்கேனும் மானத்தமிழ் பிள்ளைகள் நாம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற உறுதியை ஏற்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சோழர் கால ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்றிய அரசன் இராஜராஜன் என்கிற அருண்மொழிச்சோழன். அரசனுக்கு அரசன், மாமன்னன் என்று தான் இருக்க வேண்டும். ஆனால் நாம் சமஸ்கிருதத்தை உள்வாங்கியதன் விளைவு அரசன் என்று இருக்க வேண்டிய இடத்தில் ராஜன் என்று மாறியிருக்கிறது. அரசனுக்கு அரசன் என்பது ராஜராஜனாக மாறிவிட்டது. அதை மீட்டுருவாக்கம் செய்கிற பணியை செய்வதன் விளைவாக, பதாகைகளில் அரைவட்டத்திற்குள் இராசேந்திரச்சோழன் என்றும் அதற்கு மேலே பெரிதாக அரசனுக்கு அரசன் அரசேந்திரச்சோழன் என்றும் எழுதி வருகிறோம். ராஜராஜன் என்று எப்படி மாற்றப்பட்டதோ அப்படி அரசனுக்கு அரசன் என்று மாறும். அது எப்படி பழக்கப்பட்டதோ அப்படி இதுவும் பழக்கப்படும். 'பஸ் ஸ்டண்ட்' என்று சொல்லிக்கொண்டிருந்தோம், இப்போது எல்லோரும் பேருந்து நிலையம் என்று தான் சொல்லுகிறோம்.
ஆரம்பத்தில் 'ஜில்லா' என்றீர்கள், இப்போது எல்லோரும் மாவட்டம் என்று தான் சொல்லுகிறீர்கள். நாம் வருவதற்கு முன்பு எல்லா தொலைக்காட்சியும் 'லைவ்' என்று தான் ஒளிபரப்பியது, இப்போது தான் நேரலை நடக்கிறது. நாம் வருவதற்கு முன்பு எல்லோரும் 'பிரச்சாரம்' தான் செய்துகொண்டு இருந்தார்கள், இப்போது நாம் தமிழர் பிள்ளைகள் வந்த பின்பு பரப்புரை செய்கிறார்கள். மாற்றம் என்பது தானாக வராது, அதை நாம் தான் உருவாக்க வேண்டும். இது நமது காலம்.
நாம் சோழர்களைப் பற்றி பேசுவதும், வரலாற்றைப் பேசுவதற்கும் காரணம், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வரலாறு தான் வழிகாட்டும். அண்ணல் அம்பேத்கர் சொல்வதைப் போல, வரலாறு படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாற்றில் எங்கு நாம் வாழ்ந்தோம், எங்கு வீழ்ந்தோம் என்று அறியாது நாம் எழுச்சிபெற முடியாது. வரலாறு என்பது வெறும் வார்த்தை அல்ல, வருங்கால தலைமுறையின் வழித்தடம். சேர சோழ பாண்டியர் மூவரும் சேர்ந்து சண்டையிட்டிருந்தால் உலகம் முழுவதும் தமிழர் நிலமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இவர்கள் சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம் செய்தார்கள்.
இப்போது கூட, நம்மை கொடியேற்ற விடாமல் தடுக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் கொடியேற்றும்போது இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த மண்ணின் மகன், மானத்தமிழ் பிள்ளை நான் கொடியேற்றும்போது உங்களுக்கு வலிக்கிறது என்றால் என்ன காரணம்? எங்களை பறை அடிக்க கூடாது என தடுக்கிறீர்கள்; பறை என்பது வெறும் பறை அல்ல, என் இனத்தின் எழுச்சிமிகு குறியீடு. எங்கள் முழக்கமே, ‘இது ஆதித்தமிழ் பறையடா, அதை அடித்து பகை முகத்தில் அறையடா’ என்பது தான். 2 சீட்டிற்கும் 3 சீட்டிற்கும் மண்டியிட்டு கூட்டணிக்கு செல்லும் உங்களுக்கு எங்களைப் போன்று தேர்தலில் தனித்து போட்டியிட துணிவிருக்கிறதா? பேரம் பேசி, காசு வாங்கிக்கொண்டு, சீட்டு வாங்கி கட்சி நடத்தும் கோழைகள் அல்ல நாங்கள். இந்த இடம் உங்கள் கோட்டையென்றால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்கள் கோட்டை என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.