வடகிழக்குப் பருவ மழையின் போது கிடைக்கும் மழை நீரை முழுவதுமாக சேமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றிறிக்கைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளோம். வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழைநீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
சரியான முன்னெச்சரிக்கை மூலம் பொருள் மற்றும் உயிர்ச்சேதங்களை தடுக்க முடியும் என்பதை கஜா புயலின் போது செயல்படுத்தியுள்ளோம். மாநில அவசர கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வரும். கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு எண் 1070 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் பேரிடர் தொடர்பான தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பான இதர அலுவலகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தடையில்லாமல் விரைவாக சென்று சேர்க்கப்படும்.
அதேபோல் மாவட்ட அளவிலான அவசரகால கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் செயல்படும். 30,759 முதல்நிலை காப்பாளர்கள், பேரிடரால் பாதிப்படையக் கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட 4,399 பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.
கால்நடைகளை காப்பாற்ற அரசு சாரா நிறுவனங்களின் தன்னார்வலர்களைக் கொண்டு 1674 பேரிடர் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் உருவாகின்றன. அந்தச் சமயங்களில் என்னென்ன முன்னெச்சரிக்கை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் சுற்றறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளோம்’’ எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.