வீடு, அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு - அமைச்சர் எச்சரிக்கை

வீடு, அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு -  அமைச்சர் எச்சரிக்கை
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • Share this:
3 மாதங்களுக்குள் வீடுகள், அலுவலகங்களில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடப்பு பருவத்தில் சராசரியாக 18 சென்டி மீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில் 16 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னையில் வழக்கமாக கிடைக்கும் 26 சென்டி மீட்டர் மழைக்கு பதில் 31 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் 3 மாதங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை செயல்படுத்த வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கெடு விதித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னையில் 2.35 லட்சம் கட்டடங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளதில் 1.36 லட்சம் கட்டடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்பு சிறப்பாக உள்ளது.

60 ஆயிரம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை. 

சென்னையில் அண்மையில் பெய்த மழையால் 5 டிஎம்சி நீர் வரை சேமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மழைநீரை சேமிப்பதன் மூலம் மட்டுமின்றி கழிவு நீரையும் சுத்திகரித்து ஆற்றில் விடுவதன் மூலமும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உறுதி செய்யப்பட்டால் ஏரிகளில் போதிய நீர் இல்லாத போதும் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் காக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

Watch Also:
First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்