தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரேஷன் முறையில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
போதிய மழைப்பொழிவு இல்லாததால், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வேடந்தவாடி கிராமத்தில் 1,200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கிராமத்திற்கு நீர் ஆதாரமாக இருந்த திறந்தவெளி கிணறு, முற்றிலும் வற்றிவிட்டது. இதனால், ஏரிப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் கொண்டுவந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் நிரப்பும் டேங்க் ஆபரேட்டர்கள், அதிகாலை 4 மணி முதல் கிராம மக்களுக்கு விநியோகிக்கின்றனர்.
அதிலும், வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு 2 குடம் வீதம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 1 வீட்டிற்கு 1 நபர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால், பெற்றோரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் வரிசையில் நின்று தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர். ஒரு சிலருக்கு தண்ணீர் கிடைக்காத சூழலே இருப்பதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டும் பொதுமக்கள், கூடுதலாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.