Home /News /tamil-nadu /

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு

நீர்நிலை ஆக்கிரமிப்பு

நீர் நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டபடக்கூடாது என்றும், முக்கியமான நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி. மாத்தூர் ஏரி உள்ளிட்ட  நீர் நிலைகளை பாதுகாக்கக் கோரிய வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது, தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என குறிப்பிட்டனர். இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு கண்காணிப்போம் என்றும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌ஷேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

அதில், ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி சித்தர் பீடத்தால் நீர்நிலை ஆக்கிரமிப்பு: மீட்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு


மேலும், சித்தாலபாக்கம் ஏரியை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டதாகவும், அந்த கூட்டத்தில், நீர் நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ்(GPS) கருவி மூலம் வரைபடம் தயாரிக்கபட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, நல சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என குழு அமைத்து மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்கும் வகையில் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தி முன்னோடி திட்டமாக சிட்லபாக்கம் ஏரியில் முதல் கட்டமாக அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளை மீட்டு அதை பாதுகாப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

நீர் நிலை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களுக்கு மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என கடந்த மாதம் தலைமை செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட மாட்டது என்றும், சம்பந்தப்பட்ட நிலத்தை பதிவு செய்வதற்கு முன்னால் பதிவு துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடுவெடுக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: வேதா இல்லம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு!


நீர் நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டபடக்கூடாது என்றும், முக்கியமான நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9802. ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கபட்டு புரணமைக்கபடும் என்றும், இதில் 147 நீர் நிலைகள் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தபடுவதாகவும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டபட்டுள்ள இடங்களில் வீட்டு வரி விதிக்கபட மாட்டாது, அங்கீகாரம் வழங்கபடமாட்டாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கபட்டது.

அப்போது சில மனுதாரர்கள் தரப்பில், தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல், நீர்நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 8ஆம் தேதி தள்ளிவைத்தனர். தவறும்பட்சத்தில் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

அதேசமயம், 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Chennai High court, Tamilnadu government

அடுத்த செய்தி