வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்?

Youtube Video

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  சென்னை வண்ணாரப்பேட்டையில் காவலர், பாஜக பிரமுகர் என பலரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது. இந்த வழக்கில், ஓய்வுபெற்ற டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள் என பலர் கைது செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அந்த 15 வயது சிறுமி. இவர் தனது பெரியம்மாவின் மகளும் தனக்கு அக்காவுமான ஷாகிதா பானு கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு உதவியாக வீட்டிற்கு சென்றுள்ளார். பணத்திற்காக ஷாகிதா பானுவும் அவரது கணவனர் மதன்குமார், மதன்குமாரின் சகோதரி சந்தியா ஆகியோர் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.

  இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஷாகிதா பானு உள்ளிட்ட 8 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் ஆகியோரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகினர்.

  போலீசாரின் விசாரணையில், சிறுமியை தினசரி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது இந்தக் கும்பல். குறிப்பாக அரசியல் பிரமுகர்களின் ஆசைக்கிணங்க சிறுமியை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது இந்த கும்பல். ரிசார்ட்டுகளில் பல நபர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. சிறுமி பாலியல் வழக்கில் பாலியல் இடைத்தரர்களாக செயல்ப்பட்ட ஷகிதா பானு, மதன் குமார், சந்தியா, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோரின் மொபைல் போனை ஆய்வு செய்து பார்த்தபோது பல நபர்களிடம் இவர்கள் சிறுமியை வைத்து விலை பேசுவது தெரியவந்துள்ளது.

  மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள நபர்கள் பற்றி போலீசார் எடுத்துள்ள பட்டியலில் டி.எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், தற்போது பணியில் உள்ள இரண்டு காவல் ஆய்வாளர்கள், இரண்டு மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தோர் பட்டியலை நான்கு காவல் ஆய்வாளர்கள் விசாரித்து வருவதாகவும், விரைவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல முக்கிய பிரமுகர்களும் அரசு அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இதற்கிடையே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராயபுரத்தைச் சேர்ந்த வினோபாஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த வினோபாஜி, தனியார் டிவியில் செய்தியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்கின்றனர் போலீசார். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் கைது சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: