ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்துக்கு அரசு பணம் செலவிடப்பட்டதா? முக்கிய தகவல்

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்துக்கு அரசு பணம் செலவிடப்பட்டதா? முக்கிய தகவல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் தனி விமானம் மூலம் துபாய் சென்று வந்ததற்கான டிக்கெட் செலவு பற்றிய தகவலுக்கு இத்துறையில் தகவல் இல்லை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் பயணத்திற்கான செலவினப் பட்டியல் ஏதும் அரசு வசம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கிய தகவல்களில் துபாய் பயணத்தின்போது பெறப்பட்ட முதலீடுகள் தொடர்பான கேள்விக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  துபாயில் நடைபெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அரசு அதிகாரிகளும் சென்றனர். எனினும், துபாய்க்கு முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன், மகள், மருமகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. வர்த்தகக் கண்காட்சி முடிவடையும் தருவாயில், முதல்வர் சென்றது ஏன், குடும்பத்துடன் முதலமைச்சர் சென்றதால் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது சுற்றுலா பயணமா என்றெல்லாம் விமர்சித்தன. மேலும், தனி விமானத்தில் சென்றது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

  Also Read: கறிவிருந்து கச்சேரி.. திருச்சி சிவாவின் தடபுடல் பிறந்தநாள் கொண்டாட்டம் - உள்ளூர் அரசியலுக்கு அஸ்திவாரமா?

  இந்நிலையில், முதலமைச்சரின் துபாய் பயணம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை நியூஸ் 18 தொலைக்காட்சி கோரியிருந்தது. அதற்கு தலைமைச் செயலக பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்துள்ளார்.

  கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் எத்தனை என்ற கேள்விக்கு

  அரசு முறைப் பயணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை ஒரு முறை மட்டுமே துபாய் சென்றதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

  முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது உடன் சென்ற, அமைச்சர், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் எண்ணிக்கை பற்றிய கேள்விக்கு

  முதலமைச்சரின் செயலாளர்கள் உதயச்சந்திரன், டாக்டர் உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ், முதல்வரின் முதன்மை தனிச் செயலாளர் தினேஷ்குமார் மற்றும் இரு பாதுகாப்பு அலுவலர்கள் உடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த மே முதல் தற்போது வரை முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின் டிக்கெட் செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவுகள் பற்றிய கேள்விக்கு

  முதலமைச்சரின் துபாய் பயணத்தின் செலவினப் பட்டியல்கள் ஏதும் பெறப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

  முதலமைச்சர் தனி விமானம் மூலம் துபாய் சென்று வந்ததற்கான டிக்கெட் செலவு பற்றிய தகவலுக்கு இத்துறையில் தகவல் இல்லை என்றும் பதில் தரப்பட்டுள்ளது. மேலும், துபாய் பயணத்தின்போது தமிழகத்துக்கு கிடைத்த முதலீடுகள், ஒப்பந்தங்கள் பற்றிய தகவலை கோரியமைக்குஐக்கிய அரபு நாடுகள் பயணத்தின்போது 6 ,100 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்ததாகவும்,

  15 ,100 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முதலமைச்சரின் துபாய் பயணத்திற்கு பயன்படுத்திய தனி விமானத்திற்கான செலவுகளையும், குடும்ப உறுப்பினர்களுக்கான செலவினங்களையும் தமிழக அரசு ஏற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: DMK, Dubai, MK Stalin, Politics, RTI, Tamil Nadu, Udhayanidhi Stalin