என் மகள் மரணத்தில் மர்மம் இருக்கிறது-தமிழக போலீஸ் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்: ஃபாத்திமா தந்தை

  • Share this:
தன் மகள் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அவர் தமிழ டிஜிபி மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

ஐ.ஐ.டியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் தந்தை அப்துல் லத்தீஃப் காவல்துறை இயக்குநர் திரிப்பாதியை நேரில் சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டி புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகள் பாத்திமா அனைத்து தேர்விலும் முதலிடம் பிடிக்கும் அளவிற்கு திறமையான மாணவி எனவும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்விலும் முதலிடம் பிடித்தே அங்கு படிக்கச் சென்றார் எனவும் தெரிவித்தார். மேலும், குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு குன்றிய மனநிலை அவருக்கு இருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.


ஐ.ஐ.டி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தனது மகளை தொடர்ந்து துன்புறுத்தியதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதற்கு தனது மகள் அலைபேசியில் பதிவு செய்து வைத்த இறுதி வாக்குமூலமே சாட்சி எனவும் கூறினார்.

அதேசமயம், சுதர்சன் பத்மநாபன் மட்டுமல்லாமல் மேலும் பல ஐ.ஐ.டி நிர்வாகிகளும் தனது மகளின் மரணத்தில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குறித்து தனது மகள் பதிவுசெய்து வைத்துள்ள விரிவான வாக்குமூலத்தை தமிழக காவல்துறை இயக்குநரிடமும் விசாரணை நடத்தும் அதிகாரியிடமும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மர்மம் ஒளிந்திருக்கிறது:தொடர்ந்து பேசிய அவர், ஐ.ஐ.டி யில் சேர்ந்த 4 மாதத்திற்குள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தனது மகளை தூண்டிய நிகழ்வு என்னவாக இருக்கும் என்பதை தமிழக காவல்துறையினர் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் எனக்கூறினார்.

தனது மகளின் மரணத்தில் நிச்சயமாக ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை கண்டுபிடித்து தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும்,  தனது மகள் அலைபேசியில் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மரணத்திற்கு காரணமான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே தனது முதல் வேண்டுகோள் எனவும் அவர் கூறினார்.

ஆதாரங்களை மறைத்துவிட்டனர்:

தனது மகள் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தாலும் அதை எழுதிவைக்கும் பழக்கமுள்ளவர் எனவும் தனது தற்கொலைக்கு முன்பும் அது தொடர்பாக அவர் நிச்சயம் கடிதம் எழுதியிருப்பார் எனவும் லத்தீஃப் தெரிவித்தார். மேலும், தனது மகளின் தற்கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஐ.ஐ.டி யைச் சேர்ந்த நிர்வாகிகள் மறைத்து விட்டனர் எனவும் முதல் தகவல் அறிக்கையில் கூட தனது மகளின் கடிதம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தனது மகள் படிப்பில் மட்டுமல்லாமல் அனைத்து விஷயங்களையும் நேர்த்தியாக செய்யும் மனப்பக்குவம் கொண்டவள் எனக்கூறிய அவர் தனது மகள் இறக்கும் நாளுக்கு முந்தைய நாள் இயல்பாக அவள் செய்யும் எதையும் செய்யவில்லை எனவும் அன்றைய தினம் இரவு விடுதி உணவகத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுதுகொண்டிருந்த அவரை மூக்குத்தி அணிந்திருந்த ஒரு பெண்மணி சமாதானப்படுத்தியுள்ளார் எனவும் கூறினார்.

மேலும், அந்த பெண்மணி யார் என காவல்துறை கண்டறிய வேண்டும் எனவும், தனது மகள் அன்றைய சம்பவங்கள் குறித்து அவரிடம் பகிர்ந்திருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எல்லா தேர்விலும் முதலிடம் பிடிக்கும் தனது மகள் அன்றைய தினம் சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியருக்கு பயந்தே தனது லாஜிஸ்டிக்ஸ் விடைத்தாளை வாங்க தனது தோழியை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வரும், காவல்துறை இயக்குநரும் தமிழக காவல்துறை இயக்குநருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இதில் சம்மந்தப்பட்டோர் நிச்சயம் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.ஐ.டி நிர்வாகம் மழுப்புவது ஏன்?

முதல் மதிப்பெண் பெறும் தனது மகளின் விடைத்தாளில் மதிப்பெண் குறைத்ததை தனது மகள் தட்டிக்கேட்டுள்ளார் எனவும் அதில் தனது மகளுக்கும் அந்த பேராசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில பிரச்சனைகள் அரங்கேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரிக்க சி.சி.டி.வி காட்சிகளையோ தூக்கில் தொங்கிய கயிறு தொடர்பான விவரங்களையோ ஐ.ஐ.டி நிர்வாகம் தராமல் மழுப்புவது ஏன் எனவும் தனது மகளுக்கு தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமல்லாமல் ஆதாரங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக காவல்துறைக்கும் ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கும் இடையில் சில பரிமாற்றங்கள் நடந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே எந்த ஒரு ஆதாரங்களும் தனது மகளின் அறையில் கண்டெடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், கடவுளின் கிருபையால் தனது மகளின் அலைபேசி பதிவுகள் தனக்கு கிடைத்ததாகக்கூறிய அவர் அதன் காரணமாகவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் இல்லையேல் இதுவும் மற்றவைகள் போல் ஒரு தற்கொலையாக முடிந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தனை திறமைகள் நிறைந்த ஒரு மாணவி இறந்த பின்பும் ஐ.ஐ.டி நிர்வாகமோ அதன் நிர்வாகிகளோ தனக்கும் தனது மனைவிக்கும் அனுதாபத்திற்கு கூட அழைத்து ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திறமைகள் நிறைந்த இன்னொரு பாத்திமா இதுபோன்று பாதிக்காத வண்ணம் தனது மகள் கொல்லப்பட்டாரா இல்லை தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பதை தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், நேற்றைய தினமே விசாரணை துவங்கியுள்ள நிலையில் அதுபற்றி தற்போது கருத்துகூற முடியாது எனவும், தனக்கு தமிழக காவல்துறை இயக்குநர் மீதும் தமிழக முதல்வர் மீதும் அதீத நம்பிக்கை உள்ளதாகவும் அவர்கள் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading