ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘சிரிக்கும் சுவர் ஓவியங்கள்’ - டிஜிட்டல் பேனர்களால் கலங்கும் சுவர் ஓவியர்கள்

‘சிரிக்கும் சுவர் ஓவியங்கள்’ - டிஜிட்டல் பேனர்களால் கலங்கும் சுவர் ஓவியர்கள்

சுவர் ஓவியங்கள்

சுவர் ஓவியங்கள்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பேருந்து பயணத்தின் போது ஜன்னல் வழியே தெரிந்த பேனர்களில் இருந்த சில முகங்கள் குறித்து கேட்டுக்கொண்டே வந்தாள் சுட்டிக்குழந்தை ஒருத்தி. பேத்தியின் கேள்விக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அவளது தாத்தா. எனக்கும் அப்படித்தான் காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் சுவர் ஓவியங்களாகத்தான் அறிமுகமாகினர். தேர்தல் அறிவிப்பு வெளியானால் கலைஞர்கள், சுவர் ஓவியர்களுக்கு திருவிழா காலம்தான். வண்டிமாடு நுழையாத வீதிகளுக்கும், சைக்கிள் கூட நுழையாத தெருக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களையும் அவர்களது சின்னத்தையும் கொண்டு சேர்த்தது சுவர் ஓவியர்களே. இப்போதுள்ள டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் வீட்டுவாசலைகூட ஆக்கிரமித்துக் கொள்கிறது.

தேர்தல் என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இந்தச் சின்னங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பை ஓவியர்கள் செய்து வருகின்றனர்.தேர்தல் நேரங்களில் வீடு வீடாக உங்கள் சின்னம் என இரட்டை இலை, உதயசூரியன், மாம்பழம், தாமரை உள்ளிட்ட அந்தந்த அரசியல் கட்சியின் சின்னங்களை வீடு வீடாக வீதி வீதியாக வரைந்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்கள்.

wall painters
சுவர் ஓவியம்

தற்பொழுது டிஜிட்டல் பேனர்களின் வளர்ச்சியால் ஓவியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் எழுதுவதால் போதுமான வருவாய் கிடைக்கிறது, மற்ற நேரங்களில் போதிய வருமானம் கிடைக்காததால் கூலி வேலைக்கும் செல்ல வேண்டிய நிலையில்தான் உள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் தேர்தல் அறிவித்தால் கிட்டத்தட்ட மூன்று அல்லது இரண்டு மாதங்கள் என அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் இதில் ஓரளவுக்கு ஓவியர்கள் பணம் சம்பாதித்து ஓரளவுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டனர். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறைந்த நாட்களிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஒரு அரசியல் கட்சியின் சின்னம் வரைந்தால் ரூபாய் 50 கூலியாக கிடைக்கிறது . கட்சி சின்னத்துடன் வேட்பாளர் பெயரை சேர்த்து எழுத ரூபாய் 250 வரை கூலியாக தரப்படுகிறது. வேட்பாளர் சின்னங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெயர் என 50 அடி நீளம் கொண்ட சுவரில் எழுத ரூபாய் இரண்டாயிரம் வரை அரசியல் கட்சிகளிடம் இருந்து கூலியாக பெறுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக எந்தவிதமான பணிகளும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கினர். வருவாய் பெரிதாக இல்லாத அந்த கொரோனா காலத்திலும் தங்கள் சொந்த செலவில் அந்தந்தப் பகுதிகளில் கொரோனோ விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பணியை செய்து வந்தனர்.

சுவர் ஓவியங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு சுவர் ஓவியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை சம்பாதித்து அடைக்கலம் என்ற தன்னம்பிக்கை ஓவியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் எந்த கூட்டணியில் எந்த கட்சிகள் என தெரியாததால் சுவர் விளம்பரங்கள் எழுதுவதை இதுவரை உள்ளூர் அரசியல்வாதிகள் தவிர்த்து வந்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்திலுள்ள அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முடிந்து உள்ளதால் அ.தி.மு.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் தி.மு.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் என உறுதிப்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அ.தி.மு.க மற்றும் தி.மு.க தங்கள் கட்சி சின்னங்கள் மற்றும் கூட்டணி கட்சியின் கொடிகளை கிராமங்களில் உள்ள வீடுகளில் உரிமையாளரிடம் அனுமதி பெற்று தங்கள் கட்சி சின்னங்களை வரையும் பணியை தொடங்கியுள்ளனர்.

வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சின்னத்திற்கு அருகில் வேட்பாளர் பெயரை எழுதிக் கொள்வார்கள்.தற்பொழுது ஓவியர்களின் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஓவியர்களிடம் பேசுகையில் “கொரோனா காலங்களில் தமிழக அரசு, கட்டுமான தொழிலாளர் என பல்வேறு அமைப்புகளும் தொழிலாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியது. ஓவியர் நல வாரியத்திற்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்கவில்லை. ஓவியர் நல வாரியம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை.

அரசியல் கட்சி சின்னங்களை நாங்கள் சுவர்களில் சித்திரமாகவும், அரசியல் கட்சியின் சாதனைகளை எழுதியும் வரைந்து பொதுமக்கள் வாக்கு அளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் ஓவியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். புதிய அரசு அமைந்தவுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு விளம்பரங்களில் டிஜிட்டல் பேனர்களை தவிர்க்க வேண்டும். விழிப்புணர்வு விளம்பரங்களில் ஓவியர்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து தங்களுக்கு முன்னுரிமை அளித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: 5 State Election, ADMK, Banners, DMK, Painting, TN Assembly Election 2021