குழந்தைகளைக் கையில் ஏந்தி அரிவாள் மீது நடை.. திகிலான விநோதத் திருவிழா..!

21 அரிவாள்களின் மீது 68 முறை நடந்த கோயில் பூசாரி, 68 கிலோ மிளகாய் வற்றலைக் கொண்டு நடைபெற்ற அபிஷேகம்.

குழந்தைகளைக் கையில் ஏந்தி அரிவாள் மீது நடை.. திகிலான விநோதத் திருவிழா..!
குழந்தையுடன் அரிவாள் மீது நடந்த சாமியார்
  • Share this:
குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு கூரான அரிவாள்களின் மீது நடந்தபடி குறிசொல்லும் விநோத திருவிழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக 21 அரிவாள்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. பளபளக்கும் அரிவாள்களின் கூரான பகுதி பூசாரியின் பாதங்களைத் தாங்கும் வகையில் ஒரு சிமெண்ட் கட்டுமானத்தில் பதிக்கப்பட்டிருந்தது. ஒரு கையில் வீச்சரிவாளும், மறு கையில் வேல் கம்புமாக நின்று கொண்டிருந்த பூசாரி , அருள் வந்ததும் அரிவாள்களின் மீது நடக்கத் தொடங்கினார்.


குழந்தை வரம் வேண்டியிருந்தவர்கள், குழந்தை நோய்வாய்ப்பட்டபோது கருப்பசாமியிடம் வேண்டியிருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை பூசாரியின் கையில் தர, குழந்தைகளைச் சுமந்து கொண்டு அரிவாள்களின் மீது நடந்தார் பூசாரி.

இப்படியே 68 முறை அரிவாள்களின் மீது நடந்தபடியே அருள்வாக்கும் கூறினார் கோயிலின் தலைமை பூசாரி சின்னகருப்பசாமி. இதையடுத்து கோவில் பூசாரிகள் காமராஜ் , முருகேசன் ஆகியோருக்கு 68 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் நடைபெற்றது. அரைத்து வைக்கப்பட்டிருந்த மிளகாய் வற்றலைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றபோது பதினெட்டாம்படியானுக்கு ஜே என்கிற கோஷங்கள் முழங்கின.

இந்த விழாவில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்