ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வலியுறுத்தும் தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வலியுறுத்தும் தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

கள்ள ஓட்டுக்களை தடுப்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறினார்.

கள்ள ஓட்டுக்களை தடுப்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறினார்.

கள்ள ஓட்டுக்களை தடுப்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறினார்.

 • 2 minute read
 • Last Updated :

  ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வலியுறுத்தும் தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் அவையில் அமளி காணப்பட்டது.

  இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

  மசோதா குறித்த விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், 'ஆதார் என்பது ஒருவர் இந்தியாவில் குடியிருக்கிறார் என்பதற்கான சான்று. அதை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது. ஆதார் கார்டு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தால், அது இந்தியாவில் தங்கிருப்பதற்கான சான்றுகளை மட்டுமே நமக்கு அளிக்கும். இதன் மூலம், இந்திய குடிமக்கள் அல்லாதோருக்கும் மத்திய அரசு வாக்குரிமையை வழங்கப் போகிறது' என்றார்.

  மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி பேசுகையில், 'வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்படுவது. அதனை ஆதாருடன் இணைப்பது என்பது முற்றிலும் தவறான செயல்' என்று கூறினார்.

  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சவுகதா ராய் கூறுகையில் ,'தேர்தல் நடைமுறையில் மத்திய அரசு தலையிடும் செயலாகத்தான் இந்த சட்டத்தை கருத முடியும். இதனை திரிணாமூல் காங்கிரஸ் எதிர்க்கிறது' என்றார்.

  இதையும் படிங்க : ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் மசோதா இன்று தாக்கல்

  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் குரல் எழுப்பினார்கள். சில உறுப்பினர்கள் உத்தரப்பிரதேசத்தில் காரை ஏற்றிக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  இதையும் படிங்க : கல்வியில் மீண்டும் இந்தியா முதன்மை நிலையை அடைய வேண்டும் - வெங்கையா நாயுடு

  இறுதியாக, எதிர்க்கட்சிகள் கூறும் வாதங்களுக்கு அடிப்படை ஆதாரம் கிடையாது என்று மத்திய அமைச்சர்கள் அவையில் தெரிவித்தனர். கள்ள ஓட்டுக்களை தடுப்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறினார். இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர்.

  இதையும் படிங்க : பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

  இதனால் அவை சில மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு சட்டம் குறித்து மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் உவைசி கூறுகையில், 'இது ஜனநாயகத்தையும் குடிமக்களின் உரிமைகளையும் பலவீனப்படுத்தும். ஆதார் அட்டைகளில் 8 சதவீத முரண்பாடுகளும், வாக்காளர் பட்டியலில் 3 முதல் 4 சதவீத பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாக்குரிமையை இழப்பார்கள்' என்றார்.

  First published: