சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்ததையடுத்து இதற்காக பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன. ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வருவதை அறிந்த தொண்டர்கள் காலை முதலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியிலும், சசிகலாவின் திநகர் வீட்டின் முன்பு அ.தி.மு.க கொடிகளுடன் காத்திருந்தனர்.
சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் சசிகலா இன்று காலை புறப்பட்டார். இதற்கு முன்பாக அதிமுக முன்னாள் தலைவர்கள் சிலருடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.சென்னை திநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் – பத்மாவதி தாயார் கோயிலில் வழிபாடு செய்தனர். அங்கிருந்து புறப்பட்டு மெரினா நோக்கி சென்றார். சாலையில் அதிமுக கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார். கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். எம். ஜி.ஆர், அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஏன் தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இத்தனை ஆண்டுகள் மனதில் தேக்கி வைத்த பாரத்தை தற்போது ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன் அம்மா தொண்டருக்களுக்காகவே வாழ்ந்தவர் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்.
கழத்தை அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன். அம்மா உடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும்.இந்த 5 ஆண்டு காலம் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். தலைவரும், அம்மாவும் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்தவைகளும், இனி ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதையும் சொல்லி விட்டு தான் வந்தேன். தொண்டர்களையும் கழகத்தையும் தலைவரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.’ என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.