கொரோனா முடிஞ்சு கண்டிப்பா வருவேன்: கட்சியை சரிபண்ணுவேன் - தொண்டரிடம் சசிகலா பேசுவதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு

சசிகலா

கட்சிக்கு மீண்டும் கண்டிப்பாக வருவேன். கட்சியைக் காப்பாற்றுவேன் என்று சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு நிர்வாகிகள் நியமனத்தில் தொடங்கி எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்களை முடிவு செய்வது, அமைச்சர் பொறுப்புகளை முடிவு செய்வதுவரை சசிகலாவின் கரம் இருந்தது. இந்தநிலையில், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

  அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சசிகலாவையும் கட்சியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நீக்கினர். இந்தநிலையில், பிப்ரவரி மாதம் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, அ.தி.மு.கவை கைப்பற்ற முயற்சி செய்வார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பாக்கப்பட்டது. அந்தநிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் சசிகலா.

  இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ‘என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

  நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்“ என்றார்.

  சசிகலாவின் அரசியல் ஓய்வு அறிவிப்புக்கு பின், பா.ஜ.க நெருக்கடி உள்ளது என்று அரசியல்வல்லுநர்கள் தெரிவித்தனர். பலரும், சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் அ.தி.மு.க தோல்வியடையும்போது அதைச் சாதகமாக பயன்படுத்தி சசிகலா மீண்டும் கட்சித் தலைமையை கைப்பற்றுவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கணித்தனர். தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணிப்புகளின்படி, தேர்தல் முடிவில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. இருப்பினும், அ.தி.மு.க அதனுடைய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டது யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவாக இருந்தது.

  குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமூகத்தைச் சார்ந்த கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க பெரும் வெற்றியைப் பெற்றது. அதனால், அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. எதிர்கட்சித் தலைவராகவும் எடப்பாடி பழனிசாமி கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது. அதனால், அதிருப்தியில் இருக்கும் அவர் சசிகலா பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  இந்தநிலையில், நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசும் சசிகலா, ‘நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க.. கண்டிப்பா வருவேன். கண்டிப்பா கட்சியை சரிபண்ணிடலாம். கொரோனா முடிந்தவுடன் கண்டிப்பாக வருவேன். எல்லாரும் ஜாக்கிரதையாக இருக்கங்கள். குடும்பத்துடன் ஜாக்கிரதையாக இருங்கள். கண்டிப்பாக வருவேன்’ என்று பேசியுள்ளார். அந்த ஆடியோ வெளியானது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: