சசிகலா அரசியலில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது - தனியரசு

தனியரசு

சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிக்கை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று தமிழ்நாடு கொங்கு பேரவை கட்சியின் நிறுவனத் தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் முடிந்து திரும்பிய சசிகலா தமிழகத்தில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும்,  தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும், அரசியலில் முக்கிய நபராக மாறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான அம்மாவின் உணமைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

  நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

  அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

  நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்”இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பு வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் நிறுவன தலைவர் தனியரசு கூறியுள்ளார். மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “அரசியலிலிருந்து அவர் விலகுவதால் அதிமுகவுக்கு எந்த சாதகமும், பாதகமும் ஏற்படாது. சிறையிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு அவரை நேரில் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினேன். அதில் எந்தவித அரசியல் கருத்துக்களையும் அவர் கூறவில்லை. முழுவதும் அவர் உடல் நலம் சார்ந்த நலம் விசாரிப்புகள் மட்டுமே.

  வரவிருக்கும் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று எனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே தெரிவிப்பேன்.” என்று தனியரசு தெரிவித்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: