Sasikala | ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
Sasikala | ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என சசிகலா பேசியுள்ள புதிய ஆடியோ வெளியாகி இருக்கும் நிலையில், ஆயிரம் சசிகலா வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி வருகிறார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவின், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆரோக்கியராஜூடன் சசிலாக பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொண்டர்களை வைத்துதான் தலைவர் என்றும், தலைவரை வைத்து தொண்டர்கள் இல்லை எனவும் சசிகலா கூறியுள்ளார். விரைவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல கட்சியை சீரமைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுக்கு சாதகமாக சசிகலா செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் சசிகலா இல்லை எனவும் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா எந்த நாடகம் போட்டாலும் எடுபடாது என்றும், தொண்டர்களால் உருவான அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகதான் உண்மையான கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக, சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.