• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • விவேகானந்தரின் ஆன்மிகக் கண்காட்சி பள்ளிகளில் நடத்தப்படவில்லையா? பெரியார் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தடை - கி.வீரமணி

விவேகானந்தரின் ஆன்மிகக் கண்காட்சி பள்ளிகளில் நடத்தப்படவில்லையா? பெரியார் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தடை - கி.வீரமணி

K. Veeramani

K. Veeramani

திருப்பூர் மேல்நிலைப்பள்ளி நூலகம் ஒன்றுக்கு விரும்புவோர் புத்தகங்களைத் தானமாக வழங்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்ததன் அடிப்படையில், தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூலான ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற நூலை ஆர்வமுள்ள தோழர்கள் அளித்துள்ளனர்.

 • Share this:
  ‘‘விவேகானந்தர் 152 ஆம் ஆண்டு'' என்ற பெயரில் கல்வி நிலையங்களுக்குள் புகுந்து ஆன்மிகக் கண்காட்சி நடத்தும்போது, பள்ளியில் தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' நூலை வழங்கக் கூடாதா? தமிழ்நாட்டின் தந்தையல்லவா பெரியார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

  தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமை யானாள்?'' என்ற நூல் ஒரு பள்ளி நூலகத்தில் இடம்பெற்றதற்காக, பா.ஜ.க.வினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளது சட்டப்படி சரியானது தானா? முன் அனுமதியின்றி முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யாதது ஏன்? சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு:

  “திருப்பூர் மேல்நிலைப்பள்ளி நூலகம் ஒன்றுக்கு விரும்புவோர் புத்தகங்களைத் தானமாக வழங்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்ததன் அடிப்படையில், தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூலான ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற நூலை ஆர்வமுள்ள தோழர்கள் அளித்துள்ளனர்.  இதனை அறிந்த பா.ஜ.க.வினர் சிலர், அந்தப் பள்ளியை முற்றுகையிட்டதாகவும், அந்த நூலை ஏற்கக் கூடாது - மாணவர்களுக்கும் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தியதன் அடிப்படையில், கல்வி அதிகாரிகளும் தலையிட்டு அந்நூலை மாணவர்களுக்கு விநியோகம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்ததன் அடிப் படையில், முற்றுகையிட்டோர் கலைந்து சென்றனர் என்று இன்று (12.11.2021) செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

  Also read:   மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

  தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புகழ்பெற்ற நூல் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.

  தடை செய்யப்பட்ட நூலா?

  இந்த நூல் ஏதோ தடை செய்யப்பட்ட ஒன்று என்பதுபோல மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸை உள்ளடக்கிய சங் பரிவார்கள் கூக்குரலிடுவதும், பள்ளியை முற்றுகையிடுவதும் எந்த வகையில் சரியானது?  தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, உறுதிமொழியும் அரசு அலுவலர்கள் எடுக்கவேண்டும் என்று அரசு ரீதியாக ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்த அடிப் படையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 அன்று அவ்வாறே அரசு அலுவலகங்களில் உறுதி மொழியும் எடுக்கப்பட்டுள்ளது.

  Also read:  NoroVirus: வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு: கேரளாவுக்கு அடுத்த அதிர்ச்சி..

  இந்த நிலையில், தந்தை பெரியாரின் நூலை நூலகத்திற்கு வழங்கக் கூடாது, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யக் கூடாது என்று வற்புறுத்த, போராட்டம் நடத்திட, முற்றுகையிட அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? முன் அனுமதியில்லாமல் பள்ளியை முற்றுகையிட்ட வர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைது செய்யாதது ஏன்?  அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களிடம் பணிவது என்ற நிலை தொடர்ந்தால், நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை தலைவிரித்து ஆடாதா?

  விவேகானந்தரின் ஆன்மிகக் கண்காட்சி பள்ளிகளில் நடத்தப்படவில்லையா?

  விவேகானந்தர் 152 ஆம் ஆண்டு என்ற பெயரில் பிரச்சார வாகனம் தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கூடங்களில் எல்லாம் சென்று பிரச்சாரம் செய்யப்பட வில்லையா? ஆன்மிகக் கண்காட்சி நடத்தப்பட வில்லையா? அதெல்லாம் எதன் அடிப்படையில்?

  தமிழ்நாட்டின் தந்தையல்லவா பெரியார்!

  சங் பரிவார்க்கு ஒரு நீதி- 95 ஆண்டுகாலம் வாழ்ந்து மக்களின் சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும், பெண்ணடிமை ஒழிப்புக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் பாடுபட்டு, மிகப்பெரிய அளவில் சமூக மாற்றத்திற்குக் காரணமான தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூல் பள்ளி நூலகத்தில் இடம்பெறுவதோ, மாணவர்களிடத்தில் பரவுவதோ குற்றமான செயலா? இது எந்த நீதி?

  Also read:  எல்லையில் சீன கிராமம்: மோடி பயந்துட்டாரு - ராகுல் காந்தி விமர்சனம்

  பள்ளிகளுக்கெல்லாம் சென்று யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி என்றெல்லாம் நடத்தப்படுகிறது.

  இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று முதலமைச்சர் அண்ணாவால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதே! இது சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு என்று முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தப்படவில்லையா?

  தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் என்று அறிவித்தது - நடைபெறும் ஆட்சி. தமிழ்நாட்டின் தந்தை - பெரியார் என்று உயர்நீதி மன்ற நீதிபதி நீதிமன்றத்தில் சொன்னதுண்டு. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!

  சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் வீறுநடை போடும் ஓர் அரசு அமைந்த நிலையில், தந்தை பெரியாரை சமூக விரோதிபோல சித்தரிக்கும் சிறு நரிக் கூட்டத்தின் சட்ட விரோத, நியாய விரோத செயல்களை அனுமதிக்கக் கூடாது.

  சங் பரிவார்கள் பல இடங்களிலும் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது அரசின் கவனத்திற்கு வந்திருக்கும் - சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!” இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: