ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாதி பாகுபாடு: அரசு ஊழியருக்கு தண்ணீர், கழிவறை மறுப்பு... 6 பேர் மீது வழக்கு

சாதி பாகுபாடு: அரசு ஊழியருக்கு தண்ணீர், கழிவறை மறுப்பு... 6 பேர் மீது வழக்கு

சாதி வன்கொடுமை

சாதி வன்கொடுமை

கணக்கு அதிகாரியான தர்மேந்திரா யாதவ் என்பவர், ஹிந்தியில்   சாதியைச் சொல்லி திட்டியதோடு, ‘ உத்திரப்பிரதேசமா இருந்தா, உன்னைப் போன்றவர்களை வேலைக்கு வைத்திருக்க மாட்டோம். அடித்து விரட்டிவிடுவோம்’ என மாரியப்பனை மிரட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவியாளரை  தண்ணீர் அருந்தவும், கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்காமல் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்ததாக கணக்கு அதிகாரி, சூப்பிரண்டு உட்பட 6 பேர் மீது விருதுநகர் ஊரக  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  விருதுநகர்-மதுரை சாலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன்(48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அதே அலுவலகத்தில்  சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் இளங்கோவன். இவர், மாரியப்பன் தண்ணீர் குடிக்கச் சென்ற போது, சாதியைச் சொல்லித் திட்டியதோடு குவளையை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

  மேலும், அங்கு பணிபுரியும் கதிரேசன் என்பவர் மூலம் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுவதாகவும், சைகை மூலம் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சூப்பிரண்டு இளங்கோவனின் தூண்டுதலின் பேரில்  அங்கு பணிபுரிந்து வரும்  கணேஷ் முனியராஜ் மற்றும் ராஜேஸ் ஆகியோர்,  மாரியப்பன் இயற்கை உபாதையை கழிக்கச் செல்ல முடியாதபடி கழிவறையை பூட்டிக் கொண்டதோடு, பட்டியல் இனத்தவர் இந்தக் கழிப்பறையை பயன்படுத்தக் கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: மதுரையில் 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

  அதே அலுவலகத்தில் பணியாற்றும் முத்துமுருகானந்தம் என்பவர் மாரியப்பனை அலுவலகக் கணிப்பொறியை பயன்படுத்த விடாமல் தடுத்ததோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் தொடும் கணிப்பொறியை நாங்கள் எப்படி தொடுவது என கூறினாராம்.  மேலும், கணக்கு அதிகாரியான தர்மேந்திரா யாதவ் என்பவர், ஹிந்தியில்   சாதியைச் சொல்லி திட்டியதோடு, ‘ உத்திரப்பிரதேசமா இருந்தா, உன்னைப் போன்றவர்களை வேலைக்கு வைத்திருக்க மாட்டோம். அடித்து விரட்டிவிடுவோம்’ என அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதனால் மனவேதனையடைந்த உதவியாளர் மாரியப்பன் இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார்  பொதுப்பணித்துறை கணக்கு அதிகாரி, சூப்பிரண்டு உட்பட 6 பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  செய்தியாளர்: கணேஷ்நாத் அய்யம்பெருமாள் - விருதுநகர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Caste, Caste horror, Virudhunagar