விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி கிராமத்தில் தனது 16 வயது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தாய் மற்றும் மகன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அப்போது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண்ணிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி கிராமத்தை சேர்ந்த தெய்வானை என்பவரின் 16 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும் ஊராட்சி மன்ற தலைவருமான செந்தாமரையின் மகனான சுலைமான் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது . சுலைமான் அந்த பதினாறு வயது சிறுமிக்கு செல் போன் வாங்கி கொடுத்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்து சுலைமான் இடம் கொடுக்க சென்றபோது சுலைமான் குடும்பத்தார்கள் செந்தாமரை மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தெய்வானையையும், ராஜாவையும் அடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரயில்வே பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - “மன்மதராசா” மீது போலீஸ் வழக்குப்பதிவு
இதையடுத்து, பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய சுலைமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தேவயானை மற்றும் அவரது மகன் இருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தெய்வானைக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தெய்வானையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர்: கணேஷ்நாத் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.