சகோதரரின் மரணம் ஏற்படுத்திய தாக்கம்... ஏழைகளின் உயிர்காக்கும் விஏஓ ஆம்புலன்ஸ்

Youtube Video

ஏழைகளின் உயிர்காக்கும் வகையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஏஓ ஒருவர் ஆம்புலன்ஸ் சேவை நடத்திவருகிறார். தனது சகோதரரின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஆம்புலன்ஸ் சேவையை கையில் எடுத்திருக்கிறார் இந்த சமூக போராளி.

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த துரை பிருத்விராஜ், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே 2008ம் ஆண்டு இவரது வாழ்வில் நிகழ்ந்த துயரம், இன்று இவரை ஆம்புலன்ஸ் சமூக சேவகராக மாற்றி இருக்கிறது. அந்தாண்டு இவருடைய சகோதரர், அருப்புக்கோட்டையில் விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் துரை பிருத்விராஜின் மனதில் ஆழமாக பதிந்த நிலையில், இன்று இரண்டு ஆம்புலன்ஸ்களுடன் அறக்கட்டளை நடத்தி, தனக்கு நேர்ந்த துன்பம் வேறு யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்.

  உயிருக்காக போராடிய தனது தம்பிக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததை நினைத்து இன்றும் வேதனைப்படும் துரை பிருத்விராஜ், இதுபோன்ற துயரம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே "ராஜேஷ் உதவும் கரங்கள்" என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி இரண்டு ஆம்புலன்ஸ்களை வழங்கியுள்ளார்.  ஒவ்வொரு மாதமும் தனது விஏஓ ஊதியத்தில் பாதியை சேமித்து வைத்து, 2018ல் ஆம்னி வாகனத்தை வாங்கி அதனை ஆம்புலன்ஸாக மாற்றி உள்ளார் துரை. அவரின் தொண்டு நிறுவனத்துக்கு பக்கபலமாக விளங்கி வருகிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜய் கணேஷ்.

  துரையின் ஆம்புலன்ஸ் சேவையை அறிந்த தொழிலதிபர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் பலரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது 15 பேர் வரை உள்ள தொண்டு நிறுவனம், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறது.

  மேலும் படிக்க... Oximeter | தமிழகத்தில் பணம் கொடுத்தால் கூட பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கிடைக்காத நிலை... காரணம் என்ன?

  கொரோனா, ஊரடங்கு போன்ற கடினமான காலத்தையும் பொருட்படுத்தாமல் துரையின் தொண்டு நிறுவனம் தீவிரமாக இயங்குகிறது. அவரது ஆம்புலன்ஸ்கள் ஏழைகளுக்காக நிற்காமல் பறந்துகொண்டு இருக்கின்றன.

   செய்தியாளர்: கணேஷ்நாத், விருதுநகர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: