தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அதன்படி, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, சொத்து வரி உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களை இந்த அரசு ஏமாளியாக்கி, கோமாளியாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தவில்லை. இந்த வரி உயர்வை இந்த பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலாளர்கள் தாங்கி கொள்ள முடியாது. சொத்து வரி, வீட்டு வரியை கட்டமுடியாமல் பலர் வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எனவே, தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் பணியாற்றி வரும் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரி உயர்வை இந்த மக்கள் எப்படி தாங்கி கொள்ள முடியும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் திமுக சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இப்படியே அடுத்தடுத்து அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக் கொண்டே போனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். திமுகவினர் வாழ்வதற்காக மக்களை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்கள் எப்போதும் போல மகிழ்ச்சியாக வாழ, அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்தக் கட்சியை அழிக்க எந்தக்கொம்பனாலும் முடியாது.
Read more : தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக் கொள்கை- வல்லுநர்கள் குழுவை அமைத்த தமிழக அரசு
அதிமுகவில் இருப்பதே நமக்கெல்லேம் பெருமை. அதிமுகவை விட்டு வெளியேறிச் சென்றவர்களுக்கு சிறுமைதான் வந்துசேரும். எனவே, இயக்கத்தை விட்டுச் சென்றவர்களைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும் அது உறுதி என்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி அதிமுக-வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திராபிரபாமுத்தையா, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Rajendra balaji, Virudhunagar