• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'புலியைப் போன்றவர் அபிநந்தன்' : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

'புலியைப் போன்றவர் அபிநந்தன்' : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சிறைபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கதாநாயகனாக அபிநந்தன் மாறியிருந்தார். இளைஞர்கள், அவரைப் போன்று மீசைகளை வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.

  • Share this:
    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இன்று வீர் சக்ரா விருதைப் பெற்றுக் கொண்ட அபிநந்தனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், 'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்' என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    2019ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானை ஒட்டிய பாலகோட் எனும் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத முகாம்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை.

    இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டது. இரு நாட்டு விமானப்படையினரும் துரத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் செலுத்திய மிக் 21 பைசன் ஜெட் விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு சொந்தமான F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    அதே நேரத்தில் அபிநந்தன் பயணித்த விமானமும் பாகிஸ்தான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் ரத்த காயங்களுடன் அவரை மீட்டு செல்லும் வகையிலான வீடியோவை வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    28 பிப்ரவரி 2019-ல் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன், அதே ஆண்டில் மார்ச் 1-ம்தேதி விடுவிக்கப்பட்டார். இதன்பின்னர் விமானப்படையில் பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டன.

    சிறைபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கதாநாயகனாக அபிநந்தன் மாறியிருந்தார். இளைஞர்கள், அவரைப் போன்று மீசைகளை வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் அவருக்கு வீரசக்ரா விருது அளிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: