விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை.. பட்டாசு விற்பனை கடுமையாக பாதிப்பு..

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை.. பட்டாசு விற்பனை கடுமையாக பாதிப்பு..

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி விழா தடை காரணமாகவும் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலங்களிலும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டதால், சிவகாசியில் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி, தசரா விழா உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சிவகாசியில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிக அளவில் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  இந்த நிலையில், நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தைப் போலவே மகாராஷ்டிராவிலும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடமாநிலங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் இதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  Also read: 12 முதல் 18 வயது குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம்.. மருத்துவர்கள் தகவல்

  இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா 3ம் அலை வருமா, வராதா என்கிற ஒரு அச்சத்திலும் வெளிமாநிலங்களில் வரும் வாடிக்கையாளர்கள் உடைய எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது.

  இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 கோடி வரை உற்பத்தி நடைபெறும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை மட்டுமே உற்பத்தி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தொழிலில் கடுமையான ஒரு சரிவை சந்திக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

  மேலும் பட்டாசு தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக வேறு வழியின்றி பட்டாசுகள் உடைய விலையைக் கூட்ட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஊதியம் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், பட்டாசுகள் உடைய விலையினை இந்த ஆண்டு கூட்ட வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

  மேலும் தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு போடப்பட்டுள்ள தடையை நீக்கினால் ஓரளவு பட்டாசு விற்பனை இந்த மாதம் துவங்கும் என்றும் உற்பத்தி செய்து வைத்த பட்டாசுகள் விற்பனையாகும் என்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

  இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு வெளி மாநிலங்களிலும் பட்டாசுகள் வெடிக்க மத்திய அரசு, மாநில அரசுகள் உரிமை வழங்க வேண்டும் என்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: