கொரோனா தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளதாலும், மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
Also read: விநாயகர் சதுர்த்தி படையலுக்கு உகந்த மணிக்கொழுக்கட்டை.. எப்படி செய்வது...?
கொரோனா தொற்று சூழல் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், சிலையை வைத்து வழிபட்ட பின் 5 அல்லது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளைப் பின்பற்றி பொதுமக்கள் அதனை பெரிய கோவில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் கரைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.
இதனைக் கேட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், பெரிய வாகனங்களில் கூட்டமாகச் சென்று சிலைகளை கடலில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, முகக்கவசங்கள் அணிந்து, சமூக விலகளைப் பின்பற்றி ஐந்துக்கும் குறைவான நபர்கள் சிலைகளைக் கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை என தெரிவித்தார். மேலும், நாளை காலை இது குறித்து உரிய விளக்கம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.