விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இளம் பெண் தற்கொலையில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டிய நிலையில் இதுகுறித்து மரக்காணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவருக்கு வயது 36. இவருக்கும் கண்மணி (வயது 31) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி நான்கு வருடங்களாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது கணவன் மனைவியிடையே பிரச்சனையாக எழுந்தது.கண்மணிக்கும் சுகுமாரின் குடும்பத்தினருக்கும் இதன்காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. குழந்தை இல்லை என்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கண்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சுகுமாரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து கண்மனியின் பெற்றோர் வந்து பார்த்தபோது கண்மனியின் பின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பார்த்தனர்.
எங்களது மகள் தற்கொலை செய்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. மகளின் சாவில் மர்மம் இருப்பதாக குற்றஞ்சாட்டினர். மகளை சுகுமாரின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்துவிட்டு கண்மணி தூக்குப்போட்டுக்கொண்டதாக நாடகமாடுகின்றனர் என மரக்காணம் காவல்நிலையத்தில் கண்மணியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மரக்காணம் காவல்துறையினர்.கண்மணியின் கணவர் சுகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.