திண்டிவனம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி தாக்கும் மாணவரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சமீப காலமாக அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் ஒழுங்கீன செயல்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளிகள் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கியபடியும், மேற்கூரைகளில் அமர்ந்தவாறும் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதேப்போல் விழுப்புரம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் காந்தி சிலை அருகே நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட சம்பவம் அரங்கேறி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
ஒரு சில பகுதிகளில் பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி கொள்ளும் காட்சிகளும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், அரசு பள்ளி ஒன்றில் வகுப்பறைக்குள் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி மாணவர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேருந்தில் பாலியல் சீண்டல்.. ஊக்கு மூலம் தக்க பாடம் புகட்டிய பெண்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியுள்ளன. இந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் உடன் படிக்கும் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி தாக்கியுள்ளார்.
அதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து நண்பர்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ சில நாட்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: பேஷியல் செய்வது போல் நடித்து நகை கொள்ளை ... கடலூரில் பரபரப்பு
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிடம் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கேட்டப்போது. பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ள கூடாது என தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.