விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சியில் 100 வீடுகள் கொண்ட
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது அவர், பயனாளி மூலம் ரிப்பனை வெட்ட வைத்து சமத்துவபுரத்தை திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொழுவாரியில், 2 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில், 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், நூலகம், அரங்கம் உள்ளிட்ட எல்லா வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்ட முதலமைச்சர், அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், பெரிய கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சமத்துவ புரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பயனாளி ஒருவர் மூலம் ரிப்பன் வெட்டவைத்து சமத்துவ புரத்தை அவர் திறந்துவைத்தார். பின்னர் சமத்துவபுர வளாகத்தில் கலைஞர் பூங்கா,நூலகம் அமைப்பதற்காக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து ஒழுந்தியாம்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முக.ஸ்டாலின் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 10,772 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளாட்சித்துறை சார்பில் அமையும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. என்னதான் நான் முதலமைச்சராக இருந்தாலும், ஏற்கனவே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவன் நான். உள்ளாட்சித்துறை மக்களுக்கு மிகவும் நெருக்கமாக, மக்களோடு மக்களாக இருக்கும் துறை. மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும் துறையாக உள்ளாட்சித் துறை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
read this: தமிழ்நாட்டில் ஒருபோதும் காவி வர முடியாது' - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
மேலும், கொழுவாரி சமத்துவபுர திட்டத்திற்கு 2010ஆம் ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிய திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலுவான கிராமங்களை உருவாக்கினால் மட்டுமே வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்று பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.