கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட விழா குழு முடிவு செய்துள்ளது.
இந்த விழாவில், சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விழாவில் திருநங்கைகள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்து அறநிலைத் துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவிழாவின் போது முதல் நாள் நடக்கும் மிஸ் கூவாகம் போட்டி ஆண்டாண்டு காலமாக விழுப்புரத்தில் நடைபெற்று வந்தது. தற்போது விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூவாகம் கிராமம் அமைந்துள்ளதால், இந்த ஆண்டு முதல் தொடர்ந்து மிஸ் கூவாகம் போட்டியை உளுந்தூர்பேட்டையில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை திருவிழா கொண்டாட காப்பு கட்டுதல் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவான் கண் திறத்தல் , திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19ஆம் தேதியும் தேரோட்டம் மறுநாள் 20ஆம் தேதியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
Read More : 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிடா முட்டு திருவிழா... ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட கிடாக்கள்!
முன்னதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் கீழுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு இயக்கங்கள் சார்பிலும் விழுப்புரத்தில் பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்ட மின்னொளி மேடையில் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் மிஸ் கூவாகம் போட்டி நடப்பது வழக்கம்.
Must Read : மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ... அரசு ஊழியர் கைது
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானாபெருந்த்தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கூத்தாண்டவர் கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரத்தில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு முதல் உளுந்தூர்பேட்டையில் நடத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் திருநங்கைகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.