செய்யாறு, திண்டிவனத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் உரை

தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 • Share this:
  வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வடமாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக செய்யாறு, திண்டிவனம் பகுதிகளில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் அமையவுள்ளதாக முதலமைச்சர் மு.கஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். 

  சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

  கடந்த இரு நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் அறிவுரையாக எடுத்துக் கொள்வதாகக் கூறிய ஸ்டாலின்,  பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல தாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்திருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் உறுதிபடக் கூறினார்.

  ஆளுநர் உரை முன்னோட்டம் தான்

  ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர்,தாங்கள் ஆட்சிக்கு வந்த 49 நாட்களிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என விரும்பும் எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தற்போது வரை 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு ‘ உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

  கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு, மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக இருந்தது தான் காரணம் என்றார் . கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டி வைக்கவில்லை எனவும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் வருவது போல பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தை அவர் மறந்து விட்டதாகவும் முதலமைச்சர் குறை கூறினார்.  மேலும், ஆளுநர் உரை மணி ஓசையும் அல்ல, யானையுமல்ல எனக் கூறிய ஸ்டாலின், அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள் என்றும் திமுக அடக்கமுடியாத யானை என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்தார்.

  மேலும் படிக்க: அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் பேச்சு: ஸ்டாலினுக்கு துரைமுருகன் பாராட்டு..

  இல்லை என்ற சூழலை உருவாக்கியுள்ளோம்

  தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதாகவும் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

  22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

  வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனம் பகுதிகளில் 22 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க அறவழியிலும் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

  இதையும் படிங்க:  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை...

  100 கோடி ரூபாய் செலவில் திருக்கோயில்கள் சீரமைக்கப்படும், பழைய சமத்துவபுரங்கள் சீரமைப்படுவதுடன், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை வெளியிடும் போது திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரையாற்றியதை அடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

   
  Published by:Murugesh M
  First published: