திமுக கவுன்சிலர்கள் கடத்தல்.. வெடித்த கோஷ்டி பூசல்.. மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி.. பரபரக்கும் கடலூர்..
திமுக கவுன்சிலர்கள் கடத்தல்.. வெடித்த கோஷ்டி பூசல்.. மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி.. பரபரக்கும் கடலூர்..
திமுக கவுன்சிலர்கள்
Cuddalore DMK Infighting | திமுக கவுன்சிலர்கள் சிலர் போலீசாரின் காலை பிடித்துக் கொண்டு மேயர் தேர்தலில் வாக்களிக்க தங்களை வெளியே அழைத்து செல்லுமாறு கூறி கதறினர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் கடலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று கடலூர் மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால் திமுகவிற்குள் நிகழ்ந்து வரும் கோஷ்டி பூசல் காரணமாக கடலூர் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட அமைச்சரான திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான திருமதி.சுந்தரி ராஜாவை கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக தலைமை அறிவித்துள்ள .சுந்தரி ராஜாவை எதிர்த்து கீதா குணசேகரன் என்பவர் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைமை அறிவித்துள்ள கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் சுந்தரி ராஜா, சுமார் 15க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்களை கடத்தி வந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் அடைந்து வைத்துள்ளார்.
தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் கீதா குணசேகரனின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. எனவே, கீதா குணசேகரனுக்கு வாக்களிக்க விடாமல் தடுக்கும் நோக்கத்தில் சுந்தரி ராஜா தரப்பினர் திமுக கவுன்சிலர்களை கடத்தி வந்து தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். இதனிடையே இன்று மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிக்க தங்களை அனுப்புமாறு வலியுறுத்தி தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள 15க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் இன்று அதிகாலை தங்களை வெளியே விட கோரி கூச்சல் எழுப்பியபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் திமுக கவுன்சிலர்கள் தங்க வைப்பட்டுள்ள தனியார் சொகுசு விடுதிக்குள் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த திமுக கவுன்சிலர்கள் சிலர் போலீசாரின் காலை பிடித்துக் கொண்டு மேயர் தேர்தலில் வாக்களிக்க தங்களை வெளியே அழைத்து செல்லுமாறு கூறி கதறினர். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உத்தரவால் திமுக கவுன்சிலர்களை வெளியே அழைத்து செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்களை போலீசார் சமாதானம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் திமுக கவுன்சிலர்களை வெளியே அழைத்து செல்லாமல் வெருங்கையுடன் போலீசார் திரும்பி சென்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் திமுக கவுன்சிலர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் இன்று நடைப்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.