விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூடத்தில் கலந்துக்கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து பெரிய கட்சிக்கு வாக்களித்து வருகிறீர்கள் ஆனால் மக்கள் வாழ்க்கை தரம் முன்னேறவில்லை. மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது, இந்த எட்டு ஆண்டில் ஒரு மணிதனின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியிருக்கிறது மோடி அரசு. 2014ஆண்டு முன்பு வரை தமிழகத்தில் ஒரு கழிப்பறை கட்டுவதென்றால் கூட தாஜ்மகால் கட்டுவது போல் இருந்தது. தமிழகத்தில் 2014 முதல் இதுவரை 57 லட்சம் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன.
மத்திய அரசு 48 ரூபாய்க்கு அரிசி வாங்குகிறது, மாநில அரசு 2 ரூபாய் கொடுக்கிறது இதனை கொடுக்கும் போது மாநில அரசு கொடுப்பது போல் பில்டப் கொடுக்கிறார்கள். மோடி அரசு கொரோனா காலகட்டத்தில் 80 கோடி பேருக்கு இரண்டு ஆண்டுகளாக இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. 73 சதவீதம் நகை கடன் வைத்திருந்தால் செல்லாது என கூறிவிட்டனர். மேலும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள் ஆனால் தற்போதுவரை தரவில்லை.
திமுகவின் எட்டு மாத கால ஆட்சி 80 ஆண்டுகால ஆட்சி கொடுக்கும் சலிப்பை கொடுத்துள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர், தற்போது தழிழகத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது, பேனர்களை கிழிப்பது, வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது அதற்கு காரணம் தமிழகத்திலேயே திமுகவின் தவறுகளை தட்டிகேட்டு ஊழலை தடுத்து நிறுத்தி வருகிறது பாஜக. ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவது தான் பாஜகவின் லட்சியம்.
Read More : என்னை எதிர்க்க ரஜினி, விஜய்யைப் பயன்படுத்துகின்றனர் - சீமான்
வளர்ச்சிப் பாதையில் செல்ல ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத பாஜக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் வந்தாலும் அதனை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள். நகராட்சிகளில் 25 கிருஸ்தவர்கள், 8 இஸ்லாமியர்கள் போட்டியிடுகிறனர். சிறுபான்மையினருக்கு திமுகவை விட அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி
திமுக மக்களை சாதியாக, மதமாக அரசியல் செய்து வருகிறது. கடைசி நாளில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள் வாங்கிக்கொள்ளுங்கள், அந்த பணம் கமிஷனாக பெற்ற பணம். பணம் கொடுத்து வெற்றி பெற்று விடமால் என நினைக்கிறார்கள் ஆனால் பாஜக அதனை அனுமதிக்காது என்று பேசினார்.
முன்னதாக பழைய பேருந்துநிலையம் அருகில் இருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை, தொடர்ந்து பாஜக வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
செய்தியாளர் : ஆ.குணாநிதி, விழுப்புரம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.