இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற இளைஞர் அடித்துக்கொலை...! 7 பேர் கைது

இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற இளைஞர் அடித்துக்கொலை...! 7 பேர் கைது
  • News18
  • Last Updated: February 16, 2020, 12:41 PM IST
  • Share this:
விழுப்புரம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற இளைஞரை தவறாக புரிந்துகொண்டு பொது மக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவத்தில் 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை கடத்த வருவதாக வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் தமிழகத்தில் ஓய்ந்துள்ள நிலையில், இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தமிழக இளைஞர் ஒருவர் கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் என்பவர் மகன் 26 வயதான சக்திவேல். இவர் விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.


புதன்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிக்கு அருகில் சென்றபோது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கியுள்ளார்.

அப்போது அருகில் உள்ள நிலத்தில் பெண் ஒருவர் களை எடுப்பதை கவனிக்காத சக்திவேல் இயற்கை உபாதையை கழிக்க முயன்றுள்ளார். அங்கு. களை பறித்துக்கொண்டிருந்த கௌரி என்ற பெண் இதை தவறாக புரிந்துகொண்டு சத்தம் போட்டுள்ளார்.

அப்போது அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சக்திவேலை துரத்தியுள்ளனர். இதனால் பயந்துபோன சக்திவேல் பயத்தில் அங்கிருந்து ஓடியுள்ளார்.ஆனாலும் அவரை விடாமல் விரட்டி பிடித்த பொது மக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் சக்திவேலின் கை, கால்களை கட்டி சரமாரியாக தாக்கினர். இதில் சக்திவேலுக்கு உடலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் பெரியதச்சூர் காவல்நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியதச்சூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத் பொது மக்களிடமிருந்து சக்திவேலை மீட்டார். விசாரணையில் அவர் உடல் உபாதையை கழிக்கச் சென்றதாக கூறியதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பாமல், நாளை விசாரணைக்காக காவல்நிலையம் வரவேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளார்.

பலத்த காயத்துடன் வீட்டிற்கு சென்ற சக்திவேல் மயங்கி விழுந்து வீட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை அடுத்து தகவலறிந்து சென்ற போலீசார், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சக்திவேலின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சக்திவேல் மரணத்திற்கு காரணமான செ.புதூர் கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சக்திவேல் கொலை விவகாரத்தில் 7 பேரை கைது செய்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்