10 ஆண்டுகால குடிநீர் பிரச்சினைக்கு அரசின் உதவியை எதிர்பாரமால் தீர்வு கண்டுள்ள கிராம மக்கள்..

10 ஆண்டுகால குடிநீர் பிரச்சினைக்கு அரசின் உதவியை எதிர்பாரமால் தீர்வு கண்டுள்ள கிராம மக்கள்..

கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டியில் 10 ஆண்டுகாலமாக போதிய குடிநீர் வசதி இல்லமால் மக்கள் தவித்து வந்தனர். இதனால் அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி சுமார் 71 ஆண்டுகால கிணற்றினை மீட்டு எடுத்து தங்களுடைய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர். அரசின் உதவியை எதிர்பாரமால் மக்கள் ஒன்றிணைந்து, பெண் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து தங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டு மற்றவர்களுக்கு முன் உதரணமாக மாசார்பட்டி மக்கள் மாறியுள்ளனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் மாசார்பட்டி. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிராமத்தில் உள்ளன. விவசாயம், கரிமூட்ட தொழில், கால் நடைவளர்ப்பு தான் மாசார்பட்டி மக்களின் முக்கிய தொழில். கடந்த 10 ஆண்டுகளாக மாசார்பட்டி கிராமத்தின் முக்கிய பிரச்சினையாக இருப்பது குடிதண்ணீர் தான். வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம் கீழ் தண்ணீர் வந்தாலும், குறைவாக வந்த காரணத்தினாலும், பல நாள்கள் சரிவர தண்ணீர வாரத காரணத்திலும், அருகில் உள்ள கண்மாய், கிணறுகளை தேடி அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருந்தனர்.

அதிலும் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்கமால் பல கிலோ மீட்டர் தூரம் சென்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்றும் குடிநீர் எடுத்து வரும் சூழ்நிலையில், மாசார்பட்டி மக்கள் வாழ்ந்து வந்தனர். தங்கள் பிரச்சினைக்கு தீர்வு என்று கிடைக்கும், எப்போது குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடிவுகாலம் பிறக்கும் என்று மக்கள் நினைத்து இருந்த நிலையில் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக அக்கிராமத்தினை சேர்ந்த கவிதா பொறுப்பு ஏற்றார்.



குடிநீர் பிரச்சினை காரணமாக கிராம பெண்கள் அவதிப்படும் சூழ்நிலையை போக்க வேண்டும், அதற்கு என்ன நடவடிக்கை என்று யோசிக்கும் போது, சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களால் தோண்டப்பட்ட மாசார்பட்டி கிராமத்திற்கு குடிநீர் ஆதராமாக விளங்கிய ஊர் கிணற்றினை சீரமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

1949ம் ஆண்டு தோண்டப்பட்ட அந்த கிணறு மாசார்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாக இருந்தது. காலப்போக்கில் அந்த கிணறு சரியான பராமரிப்பு இல்லமால் தூர்ந்து போய் விட்டது. சுமார் 60 அடியுள்ள கிணற்றினை மேலும் 20 அடி ஆழப்படுத்தி பராமரிப்பு செய்தால் அதில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க முடியும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முடிவு எடுத்தார்.



ஆனால், கிணற்றினை தூர் வாரும் அளவிற்கு போதிய நிதி இல்லை. அரசிடம் நிதி கேட்டு முயற்சி மேற்கொண்டால் காலதாமதம் ஏற்படும் அதற்குள் கோடை காலம் வந்துவிடும், தற்பொழுது மழைக்காலம் என்பதால் விரைந்து கிணற்றினை தூர் வாரினால் தண்ணீர் எளிதில் கிடைத்து விடும் என்று நம்பிய கவிதா, ஊர் மக்களை அழைத்து இது குறித்து எடுத்துரைத்தார்.

இதனை கேட்ட மக்கள் தங்களால் இயன்ற நிதியை தர முன் வந்தனர். இதையெடுத்து ஊர் மக்கள் 3 லட்ச ரூபாய் வர வசூல் செய்து கொடுக்க கிணறும் தோண்டும் பணி தொடங்கியது. 60 அடி இருந்த ஆழத்தினை தற்பொழுது 80 அடியாக உயர்த்தியுள்ளனர். மேலும் பழடைந்த கிணற்றினை முற்றிலுமாக சுத்தப்படுத்தியுள்ளனர். மக்களின் முயற்சிக்கு இயற்கையும் துணை கொடுக்க கிணற்றில் தற்பொழுது தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஏற்கனவே வல்லநாடு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கில் ஏற்றி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா செய்து வருகிறார். 10 ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொது மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.



இது குறித்து அக்கிராம பெண்மணி ஆனந்தி கூறுகையில், “  கடுமையான குடிநீர் தட்டுபாடு காரணமாக பாதிக்கப்பட்டு வந்தோம், கடந்த ஆண்டு கோடைகாலத்தில் குடிநீர்க்காக மிகவும் சிரமப்பட்டு வந்தோம். எங்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டோம். அதற்கு பழமையான கிணற்றினை தூர் வாரி குடிநீர் பிரச்சினையை தீர்க்கலாம் என்றார். ஆனால் ஊராட்சியில் போதிய நிதி இல்லை என்றார். இதனை தொடர்ந்து ஊர் கூட்டம் போட்டு நாங்கள் நிதி தருகிறோம் என்றோம். நிதியை திரட்டி இன்று கிணற்றை தூர் வாரி சரி செய்து உள்ளோம். எங்களுடைய குடிநீர் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துள்ளது” என்கிறார்.

இதேபோல அக்கிராமத்தினை சேர்ந்த அய்யாத்துரை கூறுகையில், “ 1949ஆம் ஆண்டு கிராம குடிநீருக்காக தோண்டப்பட்ட கிணறு, பின்னர் ஏற்பட்ட வறட்சி காரணமாக கிணற்றினை பாரமரிக்கவில்லை, தற்பொழுது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க கிராம மக்கள் முடிவு எடுத்து, நிதி திரட்டி 3 லட்ச ரூபாய் செலவில் கிணற்றினை ஆழப்படுத்தி தூர் வாரி உள்ளோம்,  எல்லா விஷயத்திற்கும் அரசினை எதிர்பார்த்து இருக்கமால் நம்மால் முடிந்தவரை கிணறு, குளங்களை பராமரிப்பு செய்தால் குடிநீர் தட்டுபாடு இருக்காது. அதற்கு எங்கள் கிராமம் ஒரு எடுத்துக்காட்டு” என்கிறார்.



மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கவிதா கூறுகையில், “வல்லநாடு குடிநீர் திட்டம் மூலமாக வரும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் பொது மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதிலும் கோடைகாலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தீர்வு காண ஊருக்குள் பழடைந்து பராமரிப்பு இல்லமால் இருந்த 71 ஆண்டுகால கிணற்றினை தூர்வாரி ஆழப்படுத்தி அதில் இருந்து குடிநீர் வழங்கலாம் என்று மக்களிடம் ஆலோசனை கூறினேன. ஆனால் ஊராட்சியில் போதிய நிதி இல்லை என்று தெரிவித்தேன். இதையெடுத்து கிராம மக்களே நிதி திரட்டி 3 லட்ச ரூபாய் கொடுத்தனர். அதன் மூலமாக கிணற்றினை ஆழப்படுத்தி பராமரிப்பு செய்து உள்ளோம். போதுமான அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. இனி எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்றும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம். அதில் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள் அந்த கூட்டு முயற்சியினால் இன்றைக்கு 10 ஆண்டுகளாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, மற்றவர்களுக்கு முன் உதரணமாக உள்ளனர் மாசார்பட்டி மக்கள். மேலும் அவர்களை வாழ்த்துவது மட்டுமின்றி மற்றவர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: