குடிநீர், பேருந்து, ரேஷன் கடை, பள்ளி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அகதிகள் போல் வாழும் கிராமம்

உசிலம்பட்டி கிராம மக்கள்

மருத்துவ அவசர உதவி என்றால் கூட 20 கிலோமீட்டர் தூரமுள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

  • Share this:
பள்ளிக்கூடம், ரேஷன் கடை, மருத்துவ வசதி, பேருந்து வசதி, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் அகதிகள் போல் வாழும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிராம மக்கள். இங்கே ஐந்து வயது ஆகிய ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் 5 கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமம் உசிலம்பட்டி. அருகே புதுக்கோட்டை மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதான தொழில் விறகு வெட்டுவது, வாருகோல் பின்னுவது.

வானம் பார்த்த பூமி என்பதால் விவசாய தொழிலும் இப்பகுதியில் கிடையாது. அதனால் அவர்கள் பெரிதும் நம்பி இருப்பது நூறு நாள் வேலையை மட்டுமே. அதுவும் முறையாக வழங்கபடுவதில்லை என கூறுகின்றனர். அரசு வழங்கும் இலவச அரசி தான் இவர்களுக்கு ஜீவதாரமாக உள்ளது. அந்த அரிசி வாங்குவதற்கும் பத்து கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இப்பகுதி மக்கள்.

சாலை வழியாக சென்றால் குறைந்தது பத்து கிலோமீட்டர், வரப்புகளின் வழியே சென்றால் ஐந்து கிலோமீட்டர், ஆனால் நிலத்திற்கு சொந்தகாரர்கள் முள்ளை வெட்டி போட்டு பாதையை தடுத்தவிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு பள்ளிக்கூடம், இப்பகுதியில் இல்லாததால், புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை சென்று படித்து வருவதாகவும், சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் உயிர் இழக்கும் நிலை ஏற்படுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

5 வயதேயான சிறுவன், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்வதால், குழந்தைகள் திரும்பி வீடு வரும்வரை தங்களுடைய உயிரை மடியில் கட்டிக்கொண்டு காத்திருப்பதாக கண்ணீர் சிந்துகின்றனர். இங்கு இருந்த பள்ளிக்கூடத்தையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி விட்டதாகவும், எனவே உடனடியாக குழந்தைகளின் நலன் கருதி இப்பகுதியில் பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது, ஆரம்ப சுகாதார நிலையம் கூட இங்கு இல்லை, ஏதாவது மருத்துவ அவசர உதவி என்றால் கூட இங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரமுள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், ஆனால் அதற்கு கூட  போதிய போக்குவரத்து வசதிகள், பேருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Must Read : தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

பள்ளிக்கூடம், ரேஷன் கடை, பேருந்து வசதி, குடிநீர் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி அகதிகள் போல் வாழ்வதாகவும், மின்சாரத்தை தவிர இங்கு எதுவும் இல்லை என அவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். உலகம் வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், தங்கள் கிராமம் மட்டும் 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published: