திருட வந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்.. ஒருவர் உயிரிழப்பு..

Youtube Video

திருச்சி மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் திருட முயன்ற இரண்டு இளைஞர்களைப் பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருட வந்தவர்கள் பயங்கரவாதிகளா? போலீசார் சொல்வது என்ன?

 • Share this:
  திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளில் தொடர்ந்து திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில பகுதிகளில் திருட்டுக்களைத் தடுக்க கிராம மக்கள் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் அல்லூர் சாய் விசாலாட்சி நகரில் வியாழக்கிழமை இரவு வெங்கடேசன் என்பவர் வீட்டில் 2 மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அப்போது கிராம மக்கள் பாதுகாப்புக் குழுவினர் அந்த மர்ம நபர்களைப் பார்த்து விட்டனர்.

  பொதுமக்களைப் பார்த்ததும் சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்த திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். இருவரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பியோடினார்.

  மற்றொரு நபர் அங்கு கிடந்த மரக்கட்டையால் பொதுமக்களையும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கத்தியைக் காட்டியும் மிரட்டியுள்ளார். இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம், ராதா உள்ளிட்டோர் காயமடைந்தனர். அங்கிருந்த 7 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

  பொது மக்கள் விடாமல் துரத்தியதில், தடுப்புக் கட்டையில் மோதி விழுந்தபோது சிக்கிக் கொண்டார். சிக்கியவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கிராம மக்கள் அவரது கை, கால்களைக் கட்டி சரக்கு வாகனத்தில் அழைத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இதுகுறித்து அரசுமருத்துவமனை காவல் நிலைய போலீசார், ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தப்பி ஓடிய மற்றொரு நபரையும் பொதுமக்கள் பிடித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான அரவிந்த் மற்றும் 25 வயதான திபூர் என்று தெரிய வந்தது.

  இருவரும் கரூரில் தங்கியிருந்து இதுபோன்று திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் ஹெராயின் என்ற போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  அதனால், இவர்கள் கொள்ளையர்களா? அல்லது பயங்கரவாதிகளா? என்ன நோக்கத்திற்காக வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கேரளாவில் இவர்கள் மீது வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்து கேரளா போலீசாரின் உதவியையும் தமிழக போலீசார் நாடியுள்ளனர்.

  மேலும் படிக்க...ஆடி, பாடி கல்வி கற்று தந்து மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை..
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: