தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கிராமத்தில் உடலை அடக்கம் செய்வதற்கே வனத்துறையினர் லஞ்சம் கேட்பதால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கே.குமராபுரம். இந்த கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குருமலை வனச்சரகத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம் தான். இப்பகுதியில் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடு இல்லமால் மக்கள் தவித்து வருகின்றனர்.
கிராமத்தில் இறப்பவர்களை அருகில் இருக்கும் வனத்துறை பகுதியில் தான் காலம் காலமாக புதைத்து வருகின்றனர். சமீப காலமாக வனத்துறையின் கெடுபிடிகள் அதிகரிக்க ஆரம்பித்த காரணத்தினால் உடல்களை புதைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வனத்துறைப் பகுதியில் உடல்களைப் புதைக்க மட்டும் தான் முடியும் என்றும், அதுவும் சரியான பாதை இல்லமால் காட்டிற்குள் சென்று புதைத்து வருவதாகவும், மேலும் ஒரு உடல் புதைக்கப்பட்ட இடத்திலே மீண்டும் உடல்களைப் புதைக்கும் நிலை உள்ளதாகவும் வேதனையுடன் மக்கள் தெரிவித்தனர்.
தற்பொழுது புதைக்க வேண்டும் என்றால் 5000 ரூபாயும், எரிக்க வேண்டும் 10,000 ரூபாயும் வனத்துறையினருக்கு கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். கிராமத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டால், உடலை பார்த்து அழுவதை விட, அதை அடக்கம் செய்வதற்கு பணத்தினை தயார் செய்ய வேண்டிய நிலைக்கு தங்கள் தள்ளப்பட்டுள்ளதாக பரிதாபத்துடன் கூறுகின்றனர்.
எனவே தங்களது கிராமத்திற்கு தனி சுடுகாடு கிராமத்தின் அருகில் அமைத்து தாருங்கள் என்று பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க வருபவர்கள் சுடுகாடு அமைக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தாலும், அதன் பின்னர் கண்டுகொள்வதில்லை என்றும், எனவே தற்பொழுது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி சிவராமிடம் கேட்ட போது ’குருமலை வனத்துறைக் காப்புகாடுகள் அதிகமாக உள்ளது. சட்ட விதிகளின் படி உடலை புதைக்கவோ, எரிக்கவோ அனுமதி கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் உடலைகளைப் புதைக்க அனுமதி கொடுத்ததாகவும், பணம் கேட்கிறோம் என்பது தவறான தகவல். அப்படி குற்றச்சாட்டு இருந்தால் உரிய புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.