நாங்கள் குப்பை பொறுக்குவதற்கும், பிளீச்சிங் பவுடர் போடுவதற்காகவும் மட்டுமா? சென்னையில் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

நாங்கள் குப்பை பொறுக்குவதற்கும், பிளீச்சிங் பவுடர் போடுவதற்காகவும் மட்டுமா? சென்னையில் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

எம்.எல்.ஏ., எம்.பிக்கள் போன்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

  • Share this:
    தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாத ஊதியம் வழங்குதல், ஊராட்சி நலப்பணிகளுக்கு நிதி ஒதுக்குதல் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கூட்டமைப்பின் மாநில தலைவர் எஸ்.எம். முனியாண்டி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், பல்வேறு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    அதில், அரசு அதிகாரிகள் சொல்லும் தீர்மானங்களை நிறைவேற்றி கொடுக்க நிர்பந்திக்கக்கூடாது என்றும், ஊராட்சி மன்றங்களே சுயமாக முடிவெடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஊராட்சியில் உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், போதுமான நிதி ஒதுக்காமல் இருப்பதாகவும், நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் ஊராட்சி மன்றங்கள் முடங்கியுள்ளதாகவும் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



    ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராமத்தில், குப்பைகளை அகற்றுவது,பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற தூய்மை பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அதற்காக பணியாற்றுவோருக்கு சம்பள நிதி மட்டுமே தரப்படுவதாகவும், மற்ற நலப்பணிகள் செய்ய எந்த நிதியும் வழங்காமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.



    மேலும், எம்.எல்.ஏ., எம்.பிக்கள் போன்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்த தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.



    அதேபோல், பல்வேறு நலத்திட்ட பணிகளில் அரசு அதிகாரிகளோ, அரசியல் கட்சியினரோ தலையீடு இல்லாமல் ஊராட்சி தலைவர்களே செயல்படுத்த அரசு வழி வகை செய்திட வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

    Published by:Yuvaraj V
    First published: